SHARE

தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களின் ஒன்றான நமது ஈழநாடு நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் பத்திரிகை வடிவில் மின்னிதழ் மூலமாக நாளை வெளியாகின்றது.

இரத்தக்கறை மாறாத கறுப்பு ஜூலை தினமாகிய நாளை அதன் சிறப்பு மலருடன் வெளியாகி தொடர்ந்து மாதம் ஒரு முறை வெளிவரவுள்ளது

மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தரம் பரமாச்சாரிய சுவாமிகள், கிளிநொச்சி மாவட்ட உலமா சபை சர்வமத தலைவர் ஏ.எம்.ஏ. அஸீஸ் மௌலவி, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் திருமதி ஆனந்தி சூரியபிரகாசம், மூத்த பத்திரிகையாளர் ச. இராதேயன் மற்றும் மு.திருநாவுக்கரசு (அரசியல் ஆய்வாளர் சென்னை), அருட்பணி எஸ்.ஏ.றொஷான் (பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியர்), இதயச் சந்திரன் (சிரேஷ்ட உடகவியலாளர்), மறவன்புலவு க.சச்சிதானந்தன் (சிவசேனை), அ.லீலாதேவி (செயலாளர், காணாமல் போனோர் குடும்பங்களின் அமைப்பு) ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளை தாங்கியபடி நமது ஈழநாடு மின்னிதழ் சிறப்புற வெளிவருகின்றது.

தெற்காசியாவின் மிகவும் பழமையான மற்றும் உயர் தரத்திலான செய்தித்தாள் வெளியீட்டு மரபினைக்கொண்ட யாழ்ப்பாணத்தில் 1961 ஆம் ஆண்டு வெளியான முதலாவது தினசரியாகவும் தமிழ்த் தேசியத்தின் குரலாகவும் திகழ்ந்த ஈழநாடு பத்திரிகையைத் தழுவி கடந்த 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி நமது ஈழநாடு பத்திரிகை வெளியானது.

மறைந்த சின்னத்தம்பி சிவமகாராஜா இதனை நிறுவினார். தமிழ் தாயகத்தின் முன்னோடியாக தமிழர்களின் உரிமைக்குரலாக அன்று முதல் நமது ஈழநாடு தினசரி வெளிவந்தது.

ஆனால் அக்காலகட்டத்தில் இலங்கை தீவில் உச்ச நிலையிலிருந்த ஊடகத்துறை மீதான இரும்புக்கரம் எமது பத்திரிகை மீதும் கொடூரமான வன்முறையை பிரயோகித்தது.

அந்தவகையில் கடந்த 2005 ஆண்டு இலங்கை இராணுவம் நமது ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தை அத்துமீறி சோதனை நடத்தியதுடன் தீ வைத்தும் கொழுத்தினர். அதேவேளை பத்திரிகையின் இயக்குனர் சின்னத்தம்பி சிவமகாராஜா உட்பட நான்கு ஊடகவியலாளர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மர்மமான முறையில் சுட்டும் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு நமது ஈழநாடு பத்திரிகை மீதான அடக்குமுறையாலும்; அதன் ஊழியர்கள் மீதான தொடர் கொலை அச்சுறுதல்களாலும் ஏனைய ஊழியர்களின் உயிர்களை காப்பாற்றவேண்டிய கடைப்பாட்டினால் பத்திரிகை அலுவலகம் மூடப்படவேண்டிய கட்டாயத்தினுள் தள்ளப்பட்டது.

எனும் எந்த அச்சுறுத்தல்களும் தமிழர்களுக்கான தனது குரலினை நிறுத்திவிட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நமது ஈழநாடு இணையவழி செய்தி ஊடகமாக பரிமாணமெடுத்து இற்றைவரை தமிழர்களின் குரலாக இயங்கி வருகின்றது.

இந்நிலையிலேயே நமது ஈழநாடு மற்றுமொரு புதுப்பரிணாமத்தை எடுத்து நாளை முதல் மாதம் ஒரு முறை பத்திரிகை வடிவில் மின்னிதழாக வெளிவருகின்றது.

Print Friendly, PDF & Email