SHARE

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள பிலதெல்பியா ஆலயத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்தச் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிலதெல்பியா சபையானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதி கொடுத்தது? நல்லூர் பிரதேச சபை அதற்கு அனுமதி கொடுத்தது என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.

அக்கட்சியில் உள்ளவர்களே இந்த ஆலயம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே இது தொடர்பாக விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email