யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.
இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தெரிவித்ததாவது,
சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அரும்பொருள் காட்சியகம். அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் இருவரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சிலை அமைப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இதுவரை சங்கிலியனுக்கு எல்லாளனுக்கு பண்டாரவன்னியனுக்கு சிலை எழுப்பியிருக்கின்றோம்.
ஆனால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலாகிய நாவற்குழியில் எமது வரலாற்றுகளிலே பதியப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தை அடிப்படையாக வைத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னர்களின் பெயர்களோடு அவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகளைப் பதிவு செய்து அவர்களது மாதிரி உருவச்சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி எமது முன்னோர்கள் பயன்படுத்திய வண்டிகள் – கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் உள்பட எங்களுடைய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.
1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த 17 மோட்டார்க் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன. தட்டி வான் என்று சொல்லப்படுகின்ற 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய வாகனம் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
முதலாவது தளத்திலே எங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பாரம்பரியமான பொருள்கள், யாழ்ப்பாணத்தில் தமிழர் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. பித்தளைப் பாத்திரங்கள் தொடக்கம் ஆரம்பகாலத்தில் வெளிவந்த கடிகாரம், வானொலிப் பெட்டி, எம் முன்னோர் பயன்படுத்திய அருவிவெட்டும் கருவி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள், அதன்பின்னர் வெளிவந்த ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் உள்பட நாடுமுழுவதும் உள்ள பகுதிகளின் ஒளிப்படங்கள் என இவை எல்லாம் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இரண்டாவது தளத்திலே ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், பாடசாலைகளை நிறுவிய நிறுவுனர்கள் மற்றும் எமது சமய, கலாசார நிகழ்வுகளான சூரன்போர், நல்லூர் கந்தசுவாமி ஆலய மிகப் பழமை வாய்ந்த தோற்றங்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலய வரலாற்றை வெளிப்படுத்துகின்ற பெயர்கள், கீரிமலை நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், கோணேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களின் ஆதி ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
பழைய பத்திரிகைகள் – 1800ஆம் ஆண்டுகளிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் முதலாம் நாள் வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளின் முன்பக்கம் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
சுமார் 3 ஆயிரம் ஒளிப்படங்களைக் கொண்டு இரண்டாவது தள மாடியிலே வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மூன்றாவது தளத்திலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களால் வரையப்பட்ட மரபு ரீதியான ஓவியங்கள் – எங்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மிகப் பெறுமதியான வரலாற்றுத் தடயங்களைக் காட்சிப்படுத்தவிருக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு எனச் சொந்தமான அரும்பொருள் காட்சியகம் இல்லை என்ற குறையினாலே – அதுபற்றிய அறிவு – ஆர்வம் எமது சமுதாயத்திலே இல்லாமல் போனதன் காரணமாக இங்கே இருந்த எமது அடையாளப் பொருள்களை தென்னிலங்கை வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று தென்னிலங்கையிலும் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவிட்டார்கள்.
பழைய வீடுகளிலிருந்த பொருள்கள் எல்லாம் போய்விட்டன. எமது அடையாளங்கள் போய்விட்டன. ஆலயங்களில் இருந்த மிகப் பெறுமதியான வாகனங்கள்கூட விற்பனையாகிவிட்டன. தற்போது தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலும் யாழ்ப்பாணத்து வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இது மிகக் கவலையான விடயம். எங்களுடைய மண்ணிலே ஓர் அரும்பொருள் காட்சியகம் உருவாகவேண்டும் என்று பலர் விருப்பப்பட்டனர். காலஞ்சென்ற கலைஞானி செல்வரட்ணம் என்கின்ற இந்தத் துறையிலே ஆவர்மானவர். அவர் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தார்.
பேராசிரியர் கனகரட்ணம் மற்றும் குரும்சிட்டிக் கனகரட்ணம் என்று சொல்லப்படுகின்ற கண்டியில் வாழ்ந்த ஓர் அறிஞர் வீரகேசரிப் பத்திரிகை தொடக்கம் பலவற்றைச் சேகரித்துப் பாதுகாத்தவர், எப்படியாவது யாழ்ப்பாணத்தில் ஓர் அரும்பொருள் காட்சியத்தை உருவாக்கி மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று காத்திருந்தார். எனினும் போர்ச் சூழலால் முடியவில்லை, அவர்கள் எல்லாம் மறைந்துவிட்டனர். அவர்கள் தேடி வைத்த பல பொருள்களும் அழிந்துவிட்டன.
இந்த நிலையிலேதான் சிவபூமி அறக்கட்டளை என்கின்ற எமது அமைப்பு 17 ஆண்டுகளாக வடபுலத்திலே மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலை, உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கான இல்லம் மற்றும் கீரிமலை புன்னிய தலத்திலே 11 மடங்கள் போரினால் அழிவடைந்த நிலையில் அங்கே ஒரு மடத்தைக் கட்டி எங்களுடைய பாரம்பரியங்களைப் பாதுகாக்கின்றோம்.
அதேபோன்று கிளிநொச்சியிலே மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலை, திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய காணியிலேயே மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலை – மடம் அமைத்துள்ளோம்.
யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் திருவாசக அரண்மனை என்கின்ற அரண்மனையை 2018 ஆம் ஆண்டு அமைத்து அங்கே 652 திருவாசகப் பாடல்களையும் கருங்கல்லியே செதுக்கியுள்ளோம். அத்துடன், யாழ்ப்பாணம் சிவபூமி என்பதை நிலைநாட்டும் வகையில் 108 சிவலிங்கங்களை அமைத்துள்ளோம்.
இவற்றுக்கு அடுத்த பணியாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” அமைத்து நிறைவேற்றியிருக்கின்றோம். இது தமிழர்களின் சொத்தாகும். என்னைப் பொறுத்தவரை சிறியேன் எத்தனையோ ஆண்டுகள் கண்ட கனவு இப்போது நனவாகிறது. நான் சேகரித்த பொருள்களை தமிழ் மக்களிடம் கையளிப்பதற்காகத்தான் இந்தப் பெரிய அரும்பொருள் காட்சியகத்தை அன்பர்களின் உதவியோடு அமைத்து நிறைவு செய்துகொண்டிருக்கின்றோம்.
எங்களுடைய மன்னர்களை புத்தகங்களில் படித்தோமே தவிர, அவர்களை எமது குழந்தைகளுக்குக் காட்சிப்படுத்தத் தவறிவிட்டோம். இங்கே 21 மன்னர்கள், அவர்கள் காட்சி செய்த காலம் எல்லாம் காட்சிப்படுத்துகின்றோம்.
இது அற்புதமான சொத்தாகும். சூரியன், சந்திரன் வானத்திலே நிலைத்திருப்பது போல, இந்த அரும்பொருள் காட்சியகமும் எத்தனை தலைமுறை இந்த மண்ணிலே வாழ்ந்தாலும் நிலைத்திருக்கவேண்டும் என்று எல்லாத் தெய்வங்களிடமும் நான் பிராத்திங்கின்றேன்.
பொதுமக்களாகிய நீங்கள் இதனைக் கவனமாகப் பாதுகாக்கவேண்டும். உங்களிடமும் ஏதாவது அரும்பொருள்கள் இருந்தால் அவற்றையும் இங்கு கொண்டுவந்து குடும்பத்தின் பெயரைப் பொறித்து பாதுகாப்பாக வையுங்கள்.
எதிர்காலத்திலே வன்னி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் மலையகத்திலும் தமிழர்களுடைய பண்பாடுகளை வெளிப்படுத்தும் அரும்பொருள் காட்சியங்கள் இதைப் பார்த்து உருவாகவேண்டும்.பலர் இந்த முயற்சிலே ஈடுபடவேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.
இது ஓர் முன்மாதிரியான பணி. இது எந்தவொரு அரசியல் நோக்கத்துக்காகவோ அல்லது வாணிப நோக்கத்துக்காகவோ உருவாக்கப்பட்டதோ அல்ல. ஈழத் தமிழர்களுடைய வரலாற்றை கண்ணால் கண்டு எமது எதிர்காலச் சந்ததி உணரவேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சியாகும்.
இந்த அரும்பொருள் காட்சியகத்தை பார்வையிட வருவோருக்கு முதல் மூன்று நாள்களும் இலவச அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் இந்த அரும்பொருள் காட்சியகத்தை செயற்படுத்துவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு 50 ரூபாய் அனுமதிச் சீட்டும் ஏனையோருக்கு 100 ரூபாய் அனுமதிச் சீட்டும் வழங்கப்படும் என்று சிவபூமி அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.
தென்னிலங்கையைப் பொறுத்தவரை சிங்கள மக்கள் எத்தனையோ அரும்பொருள் காட்சியங்களை வைத்துள்ளனர். எத்தனையோ வரலாற்றுத் தடங்களை அவர்கள் பாதுகாக்கிறார்கள். நாங்கள் ஊரிலே எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று சோகத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. நாங்கள் நல்ல காரியங்களை திட்டமிட்டு செயற்படவேண்டும். இந்தப் பணிக்கு உதவிகளை வழங்கிய அத்தனை பேருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் – என்றார்