தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோ மீதான ‘ICPPG’ தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் இன்று நடைபெற்ற குறித்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணைகளின் முடிவிலேயே தலைமை நீதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார்.
பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிரான பிரதான சாட்சிகள் மூவரின் சாட்சியங்கள் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று 4 ஆவதும் இறுதியுமான நபரின் சாட்சியம் மன்றினால் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மதிய நேர இடைவேளை வரை தொடர்ந்த இந்த சாட்சியப்பதிவு விசாரணையையடுத்து பிரியங்கா பெர்னாண்டோ தரப்பு சாட்சி ஒருவரின் சாட்சியமும் மன்றினால் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து குறித்த வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி க்கு ஒத்திவைத்த தலைமை நீதிபதி அன்றைய தினம் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதேவேளை குறித்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நீதிமன்றின் முன் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யவேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு (2018) பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பிரியங்கா பெர்ணான்டோ ஆர்பாட்டக்காரர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இராணுவ அதிகாரிக்குரிய உத்தியோக பூர்வ உடையில் தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த அவர் ஆர்பாட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுப்பேன் போன்ற சமிக்ஞை ஒன்றை காண்ப்பித்திருந்தார்.
இதனையடுத்து சட்டவாளர் அருண்கணநாதன் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் ஆகியோரின் வழிநடத்தலுடன் ICPPG யினால் அவருக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நடப்பாண்டில் (2019) கடந்த பெப்ரவரி மாதம் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதில் பிரியங்கா பெர்ணான்டோ மீதான இரு குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்குஇராஜதந்திர தண்டனை முக்தி இருப்பதாக சிறிலங்கா வெறிவிவகார அமைச்சுஇ பிரித்தானியவெளிவிவகார அமைச்சின் ஊடாக தெரியப்படுத்திய நிலையில் அவர் மீதான பிடியாணையை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மீளப் பெற்றுக்கொண்டது.
பின்னர் மார்ச் மாதம் நடைபெற்ற அடுத்தகட்ட வழக்கு விசாரணையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமைகள் தொடர்பில் நீதிமன்றினால் கோரப்பட்டதுடன் அதில் கழுத்தை அறுக்கும் சைகையைகாண்பித்து அச்சுறுத்திய நடவடிக்கை அவரது இராஜதந்திர கடமையுடன் தொடர்பில்லை என்றுநீதிமன்றம் அறிவித்தது.
அதேவேளை, பிரியங்கா தரப்பிலிருந்து ஆஜரான சட்டத்தரணிஇ வழக்கு விசாரணைக்கு முன்னதாக அனுப்பிவைக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்ற அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என மன்றில் எடுத்துரைத்தார் இதனையடுத்து நீதி மன்றின் மீதான இக் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காது மீண்டும் ஒரு சர்ந்தர்ப்பதை அவர்களுக்கு வழங்க தீர்ப்பினை ஒத்திவைத்தார்
இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் மீண்டும் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அன்றைய தினம் பிரதான சாட்சிகள் மூவரின் சாட்சியங்கள் மன்றில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே இன்று மேற்படி வழக்கின் மீதான இறுதிக் கட்ட இரு தரப்பு விசாரணைகள் இடம்பெற்றதுடன் தீர்ப்பின் இறுதி திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.