புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியே காரணமென எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த விடயத்தில் பிரதமர் ரணிலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணைபோயுள்ளதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைக்கும் வரை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக் கூற முடியாது.
கோட்டாபயவின் பதவிக் காலம் முடிந்தாலும் பரவாயில்லை. அவரின் வெற்றிக்காக தமிழ் மக்கள் வாழ்த்தக் கூடிய மனநிலையிலும் இல்லை. நானும் அந்த மனநிலையில் இல்லை.
100ஆவது நாள் முடிவதற்குள் இனப்பிரச்சினை தீர்வுக்கான உறுதியான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளத் தவறினால், சர்தேச ரீதியாக ஐக்கிய நாடுகளின் உதவியுடன் வடக்கு, கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்துமாறு இலங்கையில் இருந்தும் சர்வதேச ரீதியாகவும் இருந்து அழுத்தங்களைப் பிரயோகிப்போம்.
இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் துணை நிற்க வேண்டும்.
சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்கு, ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போனதா இல்லையா என்பது பகிரங்கமாக வரும் காலம் மிக விரைவில்” என மேலும் தெரிவித்துள்ளார்.