SHARE
image_pdfPRINT

கிளிநொச்சியில் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, மற்றும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், “தமிழர்களுடைய வரலாறு தற்போது அழிக்கப்பட்டு வருகின்றது. இந்த வரலாறுகளை கடைப்பிடிக்க வேண்டியதும், அதனை அடுத்த கட்டத்துக்கு கடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பும் எங்கள் எல்லோரிடத்திலும் உள்ளது. இதில் இருந்து நாங்கள் தவறிச் செல்கின்றோம் அல்லது விலகிச் செல்கிறோம் என்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது.

இந்த உயிராயுதமான கரும்புலிகளின் வாழ்க்கை மறக்க முடியாத ஒன்றாகும். ஒவ்வொரு மாவீரர்களின் கனவுகளுக்குப் பின்னாலும் பல்வேறுபட்ட தார்ப்பரியங்கள் உள்ளன. அந்த பெரும் தியாகமும் இன்று இருக்கின்ற சமூகத்துக்கு கடத்தப்படவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தற்கொடையாக தம் உயிர் நீத்த கரும்புலிகளின் நினைவுநாள் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.