SHARE

ப.சுகிர்தன்

மிழினத்திற்கு எதிரான மாபெரும் மனிதப்பேரவலம் நடைபெற்ற 10 ஆண்டுகள் நினைவு நாளினை உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உணர்வு பூர்வமாக அனுஷ்டித்த அதே நாளில் அந்த இனப்படுகொலையை சர்வதேசத்திடம் எடுத்துச் செல்ல தமிழ் தகவல் நடுவத்தால் (TIC) பிரித்தானியாவில் அரங்கேற்றப்பட்ட ‘இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம்’ எனும் கண்காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

தமிழ் தகவல் நடுவத்தின் இயக்குனர் மறைந்த வைரமுத்து வரதகுமாரின் கனவிற்கும் திட்டமிடலுக்கும் இளைய மற்றும் மூத்த தலைமுறையினர் உருவம் கொடுக்க, பெரு விருட்சமாக தோற்றம் பெற்று இரு நாட்கள் நடைபெற்ற இக் கண்காட்சி எதிர்மறை விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

தொன்மை மிகு மனித இனத்தின் வளத்தினையும் இருப்பினையும் அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவதில் ஈழத்தமிழர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழரின் வரலாறு பாரம்பரியம் மற்றும் மரபு ஆகியவற்றையும் தமிழ் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையையும் வெளிக்கொணரும் வகையில் இலங்கைத்தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் கண்காட்சி அமையப்பெற்றிருந்தது.

பிரித்தானியாவின் Tolworth Recration Centre எனும் இடத்தின் உள்ள அரங்கில் இரு நாட்களின் முதல் காட்சிகள் மே-18 அன்று ஆரம்பமாகின.

அன்றைய நாளின் (மே-18) முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் அக்கண்காட்சியின் நோக்கத்தையும் உள்நுழைபவர்களுக்கு உணர்த்தும் வகையில் தத்துரூபமான நினைவுச்சின்னம் ஒன்று வரவேற்பு வாயிலில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்து.

முள்ளிவாய்க்காலின் போது அங்கு தாய் தன் பிள்ளைக்கு பால் கொடுக்க முடியாது பசியால் அவளது முலைகளில் பால் வற்றியிருந்ததை காண்பிக்க தாயின் மார்பில் நரம்புகள் தெரியும் படியும் இ அதன் அடியில் அங்கு கொடுக்கப்பட்ட அந்த ஒரு நேர கஞ்சியின் மகத்துவத்தை உணர்த்தும் படி கஞ்சிச் சட்டி ஒன்றும் அங்கு அனைவரது வயிறுகளும் பற்றி எரிந்த வண்ணமே இருந்தன என்பதை காண்பிக்க எரியும் விளக்கொன்றுமாக குறித்த சிற்பம் சிற்பியால் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சிற்பியின் ஆளமான கருத்தினை அந்நினைவுச்சிலையினூடாக உள்வாங்கிக் கொண்டு உள் நகர்கையில் இடது பக்கமாக தமிழீழம் வரவேற்கிறது என்ற பதாகையுடன் தமிழீழ சிவில் நிர்வாக கட்டமைப்பு சிறப்பாக காண்பிக்கப்பட்டிருந்தது.

தமிழீழ வரைபடத்துடன் அமைக்கப்பட்ட அந்த நுழைவாயிலினூக உள்நகரந்த போது விடுதலைப்புலிகளின் காலத்தில் ஈழத்தில் நிலவியில் சிவில் நிர்வாகம் இ அவர்கள் தமக்கான ஒரு நிழல் அரசை எவ்வாறு நிறுவியிருந்தார்கள் என்பதை தத்துரூபமாக காண்பித்திருந்தார்கள்.

தமிழீழத்தின் தேசிய கொடி, தேசிய சின்னங்கள் என்பவற்றில் ஆரம்பமாகி விடுதலைப்புலிகளின் ஆரம்பம் , தேசிய கட்டமைப்பின் கீழ் அவர்களிடமிருந்த படைப்பிரிவுகள் , மாவீரர் துயிலுமில்லங்கள், ஊடகங்கள், கலை பண்பாட்டு பிரிவு, தமிழீழ கல்லூரிகள், சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்கள், சட்டக் கல்லூரி, நீதி மன்றங்கள், மருத்துவப் பிரிவு, காவல்துறை, அரசியல் துறை, புனர்வாழ்வு, ஈழத்து வங்கிகள், மனநலக்காப்பகம் என அங்கு ஒரு நிழல் அரசு இயங்கியமைக்கான அனைத்து சான்றுகளையும் சிறப்பாக காண்பித்திருந்தார்கள்.

அதுமட்டுமல்லாது மாதிரி துயிலுமில்ல கல்லறை, ஈழ விடுதலைப்போராட்டத்தின் முக்கிய ஆவணங்கள், ஒளிப்படங்கள, சட்டக்கோவைகள், அறிக்கைகள், முக்கிய நூல்கள் என அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறப்பாக விடுதலைப்புலிகளின் திருமணங்களில் கட்டப்படும் விசேட புலிப்பல் தாங்கிய தாலி ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழீழத்தினுள் நிற்பது போன்றதொரு உணர்வினை அப்பகுதிக்குள் நுழைந்தவர்கள் உணர்ந்திருப்பர் என்பது மறுப்பதற்கில்லை. இதன் பின்னால் அந்த சிவில் நிர்வாக கட்டமைப்பை காட்சிப்படுத்த உழைத்தவர்களின் அர்பணிப்பை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

முள்ளிவாய்க்கால்

அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தை காண்பிக்க அமைக்கப்பட்ட பகுதிக்குள் கால்கள் நகர்ந்தன. அதன் வாயிலின் அருகே மாதிரி வைத்தியசாலை ஒன்றை அமைத்திருந்தார்கள். இரத்தக்கறைகள் படிந்த துணிகளின் மாதிரிகள் அதனுள் போடப்பட்டிருந்தமை அன்றை நாளில் இராணுவத்தின் சரமாரியான குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் இயங்கிய வைத்திய சாலைகளையும் காயப்பட்டவர்களையும் அதிக இரத்தப்போக்கினால் இறந்தவர்களையும்; கண்முன்னே கொண்டுவந்தன.

அந்த நினைவுகள் மனதை கனக்கவைக்க வருபவர்களுக்கு அதன் பக்கத்தில் பானை ஒன்றிலிருந்து கஞ்சி கொடுத்தார்கள். முள்ளிவாய்க்காலின் பேரவலத்தை சொல்ல அந்த கஞ்சி ஒன்றே போதும். தவிர, அந்த அறையினுள் முள்ளிவாய்க்காலின் போது எடுக்கப்பட்ட மனங்களை கனக்கவைக்கும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, குறித்த பகுதிக்குள் இரு கண்ணாடிப்பேளையில் பளைய பாத்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. முள்ளிவாய்க்காலில் ஒருவேளை கஞ்சியை பெற்றுகொள்ளவும் பசியைப்போக்க உணவுகள் பரிமாறப்பட்ட பாத்திரங்களில் சிலவற்றை நினைவுகளா பத்திரப்படுதியிருந்தார்கள்.

இவ்வாறு முற்றுமுழுதாக முள்ளிவாய்க்காலை கண்முன்கொண்டுவந்த அப்பகுதிக்குள் நுழைந்தவர்கள் பலர் கவலை பெருக்கெடுத்து அழுத கண்களோடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை, அந்த அறையினுள் உள்நாட்டு போரில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்பாடும் நடைபெற்றது. சர்வதேச உண்மைகள் முற்றும் நீதிக்கான அமைப்பின் செயற்திட்டம் அந்த இடத்தில் பொருத்தமானதாகவே அமைந்திருந்தது.

தொடர் இனப்படுகொலை
தமிழ் இனத்திற்கு எதிராக திட்டமிட்டு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த இனப்படுகொலைகளை பட்டியலிட்டு காட்டும் பகுதி ஒன்றினையும் இக் கண்காட்சியில் அமைத்திருந்தார்கள். அதில் இங்கினியகல படுகொலை முதல் முள்ளிவாய்க்கால் வரையான படுகொலைகளை பட்டியலிட்டிருந்ததுடன் படுகொலைகள் சமந்தமான புகைப்படங்கள் சாட்சிகளின் வீடியோக்கள் என்பனவும் அப்பகுதியை ஆக்கிரமித்திருந்தன.

சித்திரவதை
தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பிலான பகுதி மிகவும் எளிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஏவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன அவை இன்றும் தொடர்கின்றன என்பதை தெளிவுபடுத்து வகையில் அங்கு ஓவியங்கள் மற்றும் வீடியோ காட்சி மூல விளக்கம்; வழங்கப்பட்டிருந்தது.

அதேவேளை, மலையக தமிழர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் பகுதி போரியல் காலங்களில் வெளிவந்த கேலிச்சித்திரங்கள் உள்ளநாட்டு போரினால் வெளிநாடுகளிற்கான புலம்பெயர்வுகள் என்பனவும் ஈழத்தமிழர் வரலாற்றின் அதி முக்கிய சம்மபங்கள் தொடர்பிலான புகைப்படங்கள் தமிழ் நூல்கள் இலக்கியங்கள் என்பனவும் பிரதான அரங்கினை ஆக்கிரமித்திருந்தன.

இவைகளிற்கிடையே கண்காட்சியை காணவரும் சிறுவர்களுக்காக செயல்பாட்டு பகுதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடப்படவேண்டிய சிறப்பு. பொதுவாக இவ்வாறான கண்காட்சிக்கு பெற்றோர்களுடன் வரும் சிறார்கள் வேற்றுலகில் நுழைந்த உணர்வினையை பெறுவர். ஆனால் அந்த சிந்தனையை அவர்களிடமிருந்து நீக்க அரங்கின் மத்திய பகுதியில் அவர்களுக்கான செயற்பாட்டு பகுதி அமைக்கப்பட்டிருந்தது.

அதில் அவர்கள் தங்களின் சிந்தனைகளில் பிறந்தவற்றை ஓவியங்களாக வரைந்து வர்ணங்கள் பூசி அவற்றை அங்கு காட்சிப்படுத்தி மகிழ்ந்திருந்தார்கள். அதில் தமிழீழம் ஒன்றும் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை இக்கண்காட்சியின் நோக்கங்களில் ஒன்று நிறைவேறிவிட்டது என சிந்திக்கதோன்றியது.

இவ்வாறு பிரதான அரங்கு பல காட்சி அமைப்புகளுடன் நிறைந்திருக்க வெளியே உள்ள மற்றுமொரு அரங்கினுள் நுழைந்த போது தமிழரின் கலை கலாச்சாரங்களை தழுவிய அவற்றை வெளிப்பபடும் கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழர்களின் கலை கலாச்சாரங்கள் மெல்லமெல்ல அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகின்ற தற்போதைய கால சூழ்நிலையில் அவற்றை மீள உயிர்ப்புக்கும் வகையில் அங்கு அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை சிறப்பு. அதேவேளை இரண்டாவது இறுதியுமான நாளில் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதேவேளை பிரித்தானியா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது வேற்றினத்தவர்களும் பெரும்திரளாக இக்கண்காட்சியை காண அவலாக வந்திருந்ததை காணமுடிந்தது. தவிர பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் கின்ஸ்டன் நகர பிதா போன்ற விருந்தினர்களும் இக்கண்காட்சியில் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொன்மைமிகு தமிழ் இனத்தின் வரலாற்றையும் அதன் கலை கலாச்சார மரபுகளையும் அடுத்த சந்ததியினருக்கு விரைவில் கடத்த வேண்டிய அவசியமுள்ள நிலையில் மிகவும் தேவையான முக்கிய பதிவாக இக்கண்காட்சி அமைந்திருந்தது.

இங்கு இளம் தலைமுறையினரே அனைத்திலும் முன்னின்று செயல்பட்டதனை அவதானிக்க முடிந்தது. காட்சிப்படுத்தலின் போது அவர்கள் அனைத்திற்குமான விளக்கங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் பார்வையாளர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

புலம்பெயர் தேசங்களில் உள்ள இரண்டாம் தலை முறையினர் (தமிழர்) மொழிபற்று இழந்து கலாச்சாரம் மறந்து போய்கொண்டிருக்கிறார்கள் என்ற ஒர் விம்மபம் வெளியில் இருந்தாலும் இக்கண்டாட்சியினூடு அவ்விம்பத்தை அவர்கள் உடைந்து நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.

தமிழரின் வாழ்வியல் பரம்பலை கால பாகுபாட்டுடன் நேர்த்தியாக தொகுத்து காட்சிப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் கண்காட்சி அவணப்படுத்தப்படவேண்டிதொன்றே!

இது பிரித்தானியா மட்டுமல்லாது புலம்பெயர் தேசமெங்கும் காட்சிப்படுத்தப்படவேண்டும் என்பது வேண்டுகை.

Print Friendly, PDF & Email