SHARE

‘தந்தையின் பெயரை கூற முடியாது, கூறினால் இரு காதுகளையும் வாயையும் வெட்டுவதாக தந்தை கூறுவார்’ என தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாசிமின் மகள் மொஹமட் சஹ்ரான் ருசைனா வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சாய்ந்தமருது தாக்குதலின்போது காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சஹரானின் மகளிடம் சஹரான் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக அம்பாறை பொலிஸ் மற்றும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை – சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் பிரதான சூத்திரதாரியுமான சஹரானின் மனைவி மற்றும் அவரது மகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு மேலதிக விசாரணைக்காக நேற்று முன்தினம் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டுள்ள மொஹமட் சஹரானின் மனைவி மற்றும் அவரது மகள், குற்றவியல் விசாரணை பிரிவினால் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக அத்திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சஹரானின் மனைவியான அப்துல் காதர் பாதிமா சாதியாவிடம் இருந்து சில முக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் குற்றவியல் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் விசேட விசாரணைகள் அதிகாரிகள் குழு சஹரானின் மனைவி மற்றும் மகளிடம் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.