SHARE

இலங்கையில் உள்ளூர் பயங்கரவாதிகளால் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளபோதும் அதில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் தாக்குதல் நுட்பம் தெளிவாக காணப்படுகின்றதென சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு வல்லுநர்கள் கூறியுள்ளதாக ரொய்டர் செய்தி நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.

தொடர் குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரிகளின் பின்னால் சர்வதேச பயங்கரவாதிகளின் தொடர்பும் இருப்பதாக கூறியுள்ள சிறிலங்கா அரசாங்கம் எந்த அமைப்பு என தெரியவரவில்லை என கூறியுள்ளது.

இதனடிப்படையில் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு வல்லுநர்கள், இந்த மோசமான தாக்குதல் நுட்பங்களானது உலகின் பயங்கர தீவிரவாத அமைப்புக்களின் பாணியினைப் பின்பற்றியிருப்பதாக கூறுகின்றனர்.

குறிப்பாக அல்-குவைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கள் பின்பற்றும் நுட்பங்களே இந்த தாக்குதல்களின்போதும் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிகின்றது என அவர்கள் கூறுவதாக ரொய்டர் நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக இடம்பெறும் கைதுகளில் அகப்பட்டோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில் இதன் பின்னாலுள்ள சர்வதேச வலைப்பின்னல் எவ்வாறு வெளிச்சத்திற்கு வரப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கமுடியும்.

Print Friendly, PDF & Email