SHARE

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிலேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்த உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பின் (ITJP) பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தற்போது அவருக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கினை தொடர்ந்து சித்திரவதைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலர் முன்வருவர் என நம்பிக்கை வெளிட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமையினைக் கொண்ட யுத்தக்குற்றவாளியான கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கு தொடர்பில் லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாலளர் மாநாட்டிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜஸ்மின் சூக்காவை தலைமையாக்கொண்ட சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பும் (ITJP), அமெரிக்காவில் உள்ள ஹோஸ்பெல்ட் என்ற சர்வதேச சட்ட நிறுவனமும், மனித உரிமைகள் சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் என்பவரும் இணைந்து இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சித்திரவதையில் உயிர்தப்பிய தமிழரான றோய் சமத்தானம் என்பவர் சார்பில் கலிபோர்னியாவில் உரிமையியல் பாதிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பான நீதிமன்றின் அழைப்பாணை கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்தபாய ராஜபக்சவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதேவேளை படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரான லசந்த விக்கிரமதுங்கவின் சார்பில் லசந்தவின் மகள் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பற்றிய அறிவிப்பும் அவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், ITJP சார்பில் றோய் சமத்தானம் என்பவர் தாக்கல் செய்த வழக்கு குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் மாநாடு இன்று லண்டனில் நடைபெற்றது.

இதில் குறித்த வழக்கினை தாக்கல் செய்த தமிழரான றோய் சமத்தானம் ITJP யின் பணியப்பாளர் ஜஸ்மின் சூக்கா மற்றும் குறித்த வழக்கின் சட்டத்தரணியான ஸ்கொட் கில்மோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜஸ்மின் சூக்காக

அந்தவகையில் இதுவே கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டில் தாக்கல் செய்யப்படுகின்ற உரிமையியல் வழக்குகளின் முதலாவது நிகழ்வு என்று தெரிவித்த ஜஸ்மின் சூக்காக இதனையடுத்து சித்திரவதைக்கு உள்ளான ஏனையவர்களும் முன்வந்து இவ்வாறான வழக்குகளை தொடருவார்கள் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச மீது தற்போது நாம் வழக்கு தொடர்வதற்கு சிறந்த சந்தர்ப்பமாக இது காணப்படுகிறது. ஏனெனில் சித்திவதை செய்வதற்கான உத்தரவு மற்றும் கட்டளைகள் அனைத்தும் கோத்தபாயவினாலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு கோத்தபாய சட்டபூர்வமாக பொறுப்புகொண்டவர்.

பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் இந்த முறைகேடுகள் நடைபெற்றதா அல்லது சரியான முறையிலேயே செயற்பட்டார்களா என அவர் நன்கு அறிந்திருந்தார். ஆனால் அவர் குற்றவாளிகளை விசாரணைசெய்ய அல்லது தண்டிக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

எனவே தற்போது கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவில் இருக்கும் தருணத்தில் அவர் மீதான வழக்கு தாக்கல் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

றோய் சமத்தானம்

இதேவேளை குறித்த வழக்கின் பிரதானியான றோய் சமத்தானம் கோத்தபாயவுக்கு எதிராக வழக்கினைத் தொடர தான் முன்வந்தமை குறித்து தெளிவுபடுத்துகையில்,
கனேடிய குடியுரிமையை கொண்டிருந்த நான் இலங்கை சென்றிருந்த போது கோத்தபாய ராஜபக்சவினால் நேடியாகவே பாதிப்புக்கு உள்ளானேன்.

பாதுகாப்பு செயலராக இருந்த காலத்தில் அவரது நேரடி கட்டளையின் கீழ் செயற்பட்ட இலங்கை காவல்துறையினரால் 2007 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தவறான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டேன். 3 ஆண்டுகள் சொல்லில் அடங்கா சித்திரவதைகளை அனுபவித்து இறுதியில் பணம் செலுத்தியதன் பின்னர் 2010 இல் விடுதலை செய்யப்பட்டேன்.

ஆனால் விடுதலை செய்யப்படும் முன்னர் போலியான ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றில் கையொப்பமிடுமாறு வற்புறுத்தப்பட்டேன்.

இவ்வாறு உயிர் தப்பிப் பிழைத்து வந்த நான் 2011 ஆம் ஆண்டு எனக்கெதிராக இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட துன்புறுத்தல் தொடர்பில் கனேடிய பாராளுமன்றில் சாட்சியமளித்தேன். அதேவேளை 2016 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபை வழக்கில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் இலங்கை அரசோ எனக்கான நட்ட ஈட்டு தீர்ப்பினை பின்பற்ற தவறிவிட்டது. இதுவரையில் பொறுப்புக் கூறல் என்பது இலங்கையில் இல்லவே இல்லை.

இந்நிலையிலேயே, எனக்கெதிராக இழைக்கப்பட்ட சித்திரவதைகளுக்கு நீதிகோரி கோத்தபாயவிற்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன்.

எனது இந்த இந்த நடவடிக்கையானது இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையைக் கொடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர்

இதனிடையே குறித்த வழக்கின் சட்டத்தரணியான ஸ்கொட் கில்மோர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கினை தாக்கல் செய்ய முன் வந்த றோய் அவர்களின் துணிச்சலை நாம் மெச்சுவதுடன் இலங்கையில் நீதியை பெற்றுக்கொள்வதற்கு எமது நிபுணத்துவமும் வளங்களும் பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email