SHARE

தமிழீழ தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை என்பது மீண்டுமொரு முறை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரில் தமிழீழ தேசிய கொடியுடன் கைதுசெய்யப்பட்ட 4 பேர் மீதான வழக்கை தள்ளுபடி செய்த பிரித்தானிய காவல்துறையினர் தமிழீழ தேசியக்கொடி தடைசெய்யப்பட்டதொன்றில்லை என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சுமார் 6 மாதகால தொடர் தீவிர விசாரணைகளின் பின்னரே மேற்படி மகிழ்ச்சி தரும் செய்தியை அவர்கள் அறிவித்துள்ளனர்.

அந்தவகையில் பிரித்தானியாவின் எப்பகுதியிலும் தமிழீழ தேசியக்கொடிக்கு தடையில்லை என்பது உறுதியானதுடன் தமிழீழ தேசியகொடிக்கு பிரித்தானியாவில் தடை உண்டு என்று பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே குழப்பநிலையை உண்டுபண்ணி வரும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) போன்ற தேசியகொடி மறுப்பு சில அமைப்புகளின் நாடகமும் தவிடுபொடியானது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஒக்ஸ்போர்ட் யூனியனின் முன்றலில் புலம்பெயர் தமிழர்களால் எதிரப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியல் தொடர்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த இனப்படுகொலை அரசியின் பிரதமருக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வழமைபோன்று தமிழீழ தேசியகொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரணிலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபோது அங்கு நின்றிருந்து இலங்கை தூதரகத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் அவர்கள் பயங்கரவாதிகளின் கொடிகளை வைத்திருக்கிறார்கள் என திட்டமிட்டு வெண்டுமென்றே காவலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கினார்.

இதனையடுத்து அடாத்தாக செயல்பட்ட பொலிஸார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் விளையாட்டு சமூகநல பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட தமிழீழ தேசிய கொடிகளை வைத்திருந்தவர்கள் என 4 பேரை கைது செய்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்படி நால்வரையும் கைது செய்த ஒக்ஸ்போர்ட் தேம்ஸ்வலி பொலிசார் சுமார் 24 மணிநேர விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலைசெய்தனர்.

மேற்படி செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காக விரைந்து செயற்பட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத்குலசேகரம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக அவர்களின் கைதுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் குறித்த கைது விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். குறிப்பாக நாடுகந்த அரசாங்கத்தின் முன்னாள் விளையாட்டு சமூகநல பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களின் வீடு தீவிரமாக சோதனை செய்யப்பட்டதுடன் அவரது கைத்தொலைபேசி உட்பட சில உடைமைகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

இவ்வாறு சுமார் 6 மாதகாலங்கள் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் தற்போது கைது செய்ப்பட்வர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த எவ்வித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

அதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் ஏந்தியிருந்த தமிழீழ தேசியகொடி பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட கொடி அல்ல என்பதையும் தாம் ஏற்றுக்கொள்ளுவதாக அதில் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email