SHARE

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை சிபாரிசுசெய்யககோரி பிரித்தானிய பிரதமருக்கு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) என்ற அமைப்பினால் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் மீண்டும் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே இன்று பிரதமர் வாசஸ்தலத்தில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில் பிரதானமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பில் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசிற்கு இரு வருட கால அவகாசங்கள் வழங்கியும் அவற்றை இலங்கை அரசு செயற்படுத்த தவறியுள்ள நிலையில் இம் முறை மீண்டுமொரு கால அவகாசத்தினை இலங்கைக்கு வழங்கக் கூடாது. இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதற்கு அல்லது நடுநிலையான சர்வதேச நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள ஐ.நா. பாதுகாப்பு சபைக்கான சிபாரிசை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டும். மற்றும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை மற்றும் இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சிகளை பிரதமர் நேரில் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாட்டை கேட்டறிய வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ICPPG யின் ஊடக ஒருங்கிணைப்பாளர் அல்வின் சுகிர்தன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் இலங்கை குறித்து பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் இம்முறை இலங்கை மீண்டும் கால அவகாசம் கோரும் பட்சத்தில் மீண்டுமொரு கால அவகாசம் பிரித்தானியா வழங்கக்கூடாது எனவும் இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தகோரியும் அல்லது போனால் அதுபோன்ற தொரு நம்பகரமான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு வலியுறுத்தி நாம் இன்று பிரதமரிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளோம்.

பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசிற்கு ஐ.நா.வினால் கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் சிங்கள பேரினவாத அரசு அதனை செயற்படுத்த தவறி வருகின்றது. மாறாக யுத்தக்குற்றம் இழைத்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் அமைச்சு பதவிகள் வழங்கி அவர்களை பாதுகாக்கு நடவடிக்கைகளையே செய்து வருகின்றது.

ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்து காணமல் போன தமது பிள்ளைகளுக்காகவும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளுக்காகவும் ஈழத்தில் தொடர்ந்தும் வீதிகளில் போராடி வருகின்றனர். காணாமல் போனோருக்கான அலுவலம் கூட சர்வதேசத்திற்கான வெறும் கண்துடைப்பாகவே இயங்கி வருகின்றது என அவர் தெரிவித்தார்.

மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் வழிப்படுத்தலில் பற்றிக் பிரான்சிஸ் வசந்தராஜன் தலைமையில்
ICPPG யின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பற்றிக் அல்வின் சுகிர்தன் மற்றும் செயற்பாட்டாளர்களான நிறோஜன் பாலசிங்கம், செல்வச்சந்திரன் கணேசப்பிள்ளை, சைலிசன் சிதம்பரநாதன், நந்த கோபன் சிவராசா ஆகியோரால் பிரதமர் வாசஸ்தலத்தில் குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மனுவினை பார்வையிட இங்கே அழுத்தவும்

Print Friendly, PDF & Email