SHARE

பிரித்தானியாவில் வசித்துவரும் இளைஞரான இராசலிங்கம் இராகவன் குறித்து இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தார் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து குடும்பத்தினரால் நேற்றய தினம் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

யாழ்ப்பாணம் அல்வாய் தெற்கு அம்மன் கோவிலடியைச் சேர்ந்த வே. இராசலிங்கம் என்பவருடைய வீட்டிற்கு கடந்த 10 திகதி இரவு சென்ற குழுவினர் தம்மை இராணுவ புலனாய்வு துறையினர் என அறிமுகம் செய்துள்ளதுடன் லண்டனில் வசிக்கும் அவரது மகனான இராகவன் குறித்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

அதாவது லண்டனில் வசிக்கும் அவர்களது மகனான இராகவன் அங்கு விடுதலைப்புலிகளுக்கு ஆதராவான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருதாக கூறி அவற்றை நிறுத்த செல்லுமாறு கூறியும் அவரது விபரங்களை கோரியும் மிரட்டியுள்ளனர்.

அதற்கு தந்தையான இராசலிங்கம மறுப்பு தெரிவிக்க அவரை தாக்கிய குழுவினர் வீட்டிலிருந்த இளைய மகனான திலீபன் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த குடும்பத்தினர் மிகவும் பதற்ற நிலையிலும் மனவுளைச்சலுடனும் இருப்பதாகவும் தற்போது வவுனியா பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை அவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கோரியும் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

Print Friendly, PDF & Email