SHARE

இலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திரத்தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கும் எதிராக பெரும் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தூதரகத்தின் முன்னாள் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவிலானோர் ஒன்றுதிரண்டுள்ளதுடன் பறை இசை முழக்கங்களுடனும் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் இலங்கை அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பிவருகின்றனர்.

இதேவேளை கடந்த ஆண்டு சுதந்திர தின சம்பவத்தினையடுத்து இம்முறை குறித்த பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

கடந்த ஆண்டு (2018) இதே நாளில் சுதந்திர தினத்தின ஆர்ப்பாட்டத்தின் போது அப்போதைய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாகவிருந்த பிரியங்க பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இது தொடர்பிலான வழக்கும் தற்போது வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email