இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி நீதியை பெற்றுக்கொள்வதற்கான வலியுறுத்தலை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இணையவழி கையெழுத்து போராட்டம் 10 ஆயிரம் கையொப்பங்கள் என்ற முதல் கட்ட இலக்கை அடைந்துள்ளது.
இந்நிலையில் 10 ஆயிரம் கையொப்பங்களுக்கு மேல் பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் பிரித்தானிய அரசு பதிலளிக்கும் என்பதற்கிணங்க குறித்த மனுவிற்கான பதிலையும் பிரித்தானிய அரசு வழங்கவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய செயற்பாட்டாளர்களின் இடைவிடாத முயற்சியின் பயனாக குறுகியகால இடைவெளியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெறப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக குஜியந்தன் சிவபாலன் செயற்பட்டுவருகிறார்
அதேவேளை அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் குறித்த மனுவிற்கான அதிகூடிய கையொப்பங்களை பெற்றுக்கொடுத்த செயற்பாட்டாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியிருந்த உறுதிப்பாட்டை நிறைவேற்றத்தவறி வரும் இலங்கை அரசு பொறுப்புக்கூறலிலிருந்து தவறி வருகின்றது. அதேவேளை ஐ.நா.வின் முன்னாள் ஆணையாளர் அல் ஹ_சைனும் கடந்த மார்ச் மாதம் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் தனது வெளிப்படையான ஏமாற்றத்தினை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற தவறியுள்ள இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான வலியுறுத்தலை பிரித்தானிய அரசு முன்னெடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழ் பிரஜையாயின் கீழ் வரும் லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் நீங்களும் இந்த மனுவிற்கான கையொப்பங்களை இடலாம்.