SHARE
-பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் பேவ்ஸி

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றது என்பதனை தான் ஏற்றுக்கொள்வதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Mark Pawsey தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக் கோரும் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் குழுவினருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை விற்பனை செய்வதை பிரித்தானியா நிறுத்தவேண்டுமென்று கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் இளையோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அதற்கான அழுத்தத்தை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் ரக்பி மற்றும் புல்கிங்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Mark Pawsey யை விதுஷ்குமார் சிவபாலன் தலைமையிலான செயற்பாட்டாளர்களான நந்தகோபன் சிவராராஜா, நவேசுதன் நாகநாதன், நோபிள் நவேந்திரன் டேவிட் மற்றும் கிரோஜன் துரையப்பா ஆகிய குழுவினர் நேற்று முன்தினம் சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் நடைபெற்றுவரும் தொடர் இன அழிப்பு குறித்தும் ஆயுதக் கொள்வனவினால் இலங்கையில் தொடர்ந்தும் மீறப்பட்டு வரும் மனித உரிமைகள் குறித்தும் மேற்படி குழுவினரால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதேவேளை இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை பிரித்தானியா நிறுத்துவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதினை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் Mark Pawsey, இலங்கை பாதுகாப்பு விடயங்களிற்காக அதிகம் செலவு செய்கின்றது எனவும் அதிருப்த்தி வெளியிட்டார். தவிர குழுவினரின் கோரிக்கைகள் தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சருக்கு எழுதுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Print Friendly, PDF & Email