SHARE
image_pdfPRINT

சுமார் ஒருமணி நேரம் வீடு கொள்ளையரின் கட்டுப்பாட்டில்

மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்பாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்து பேருக்கும் அதிகமானவர் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

யன்னலினால் வாள்களை காட்டி கதவை திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட கதவினை உடைத்துக்கொண்டு உள்நுழைந்துள்ளனர்.

ஆறு பேர் வீட்டிற்குள் நுழைந்து வாள்களை காட்டி அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள் 4000 ரூபா ரொக்கப்பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை வீட்டினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கொள்ளையர்கள் கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து தப்பிசென்றனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அயலவர்களால் கொடிகாமம் பொலிஸாருக்கு உடனடியாக அறித்த போதிலும், கொள்ளையர்கள் தப்பிச்சென்று சில நிமிடங்களின் பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.

அதேவேளை கொள்ளை இடம்பெற்ற வீட்டு உரிமையாளரால் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.