SHARE

இலங்கையுடனான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை தடை செய்ய கோருவது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக அந்நாட்டு வணிகம் மற்றும் தொழில் அமைச்சரும் Watford தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான Richard Harrington தெரிவித்துள்ளார்.

தமிழர்களை தொடர்ந்து அடக்குமுறை செய்துகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்த பிரித்தானிய அரசை வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் நாகராசா கதாதரன் தலைமையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அஷாந்தன் தியாகராயா  செயற்பாட்டாளர்களான கணேசலிங்கம் குகறூபன், லலிதாரூபி வேலாயுதம்பிள்ளை மற்றும் இக்னேஸ்வரன் யோகராயா ஆகியயோர் மேற்படி அமைச்சரை நேற்றய தினம் சந்தித்திருந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த குழுவினருடானான கலந்துரையாடலில் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் Richard Harrington ஆயுத விற்பனை தொடர்பில் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசெல்ல அவர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றினை தான் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றம் புரிந்த விதிமுறைகளை மீறும் நாடுகளிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என்ற ஐ.நா. ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள பிரித்தானியா, பாரிய யுத்த குற்றம் இழைத்துள்ள இனப்படுகொலை இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை விநியோகித்து வருகின்றது என்பதை இந்த சந்திப்பின் போது குழுவினர் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை புரிந்த அரசுக்கு பிரித்தானிய தொடர்ந்தும் ஆயுதங்களை விநியோகித்து வருவதை தடைசெய்ய வேண்டுமென கோரியதுடன் பிரித்தானிய அரசு அதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்துமாறு பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் அந்நாட்டு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த தொடர் செயற்பாட்டின் அடுத்த நகர்வாக குறித்த விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதத்திற்கு கொண்டுவரும் முன்பிரேரணைக்கான (EDM) மனுவிற்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இளையோரால் திரட்டப்பட்டு வருகின்றது.

குறித்த மனுவில் இதுவரை 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email