SHARE

இலங்கை கல்வித் துறையில் இடம்பெறும் அரசியல் நியமனங்களுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உள்பட16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை புதன்கிழமை (4) மேற்கொள்ளவுள்ள சுகயீன விடுப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை இடம்பெற்ற பேச்சுக்கள் வெற்றியளிக்காத நிலையிலேயே இந்த அறிவிப்பை இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ளது.

“இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் இந்த அரசியல் ரீதியான நியமனங்கள் கல்வித்துறையை சீரழிக்கும் செயற்பாடாகும். இத்தகைய நியமனங்களை எதிர்த்து – இலங்கை
கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை புதன்கிழமை சுகயீன லீவில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளன.

வடமாகாணத்திலும் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மத்திய கல்வியமைச்சின் முன்னால் பெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.

இத்தகைய முறையற்ற நியமனங்கள் எதிர்கால சமூகத்துக்கு ஆபத்தானவை என்பதை உணர்ந்து நாளில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாது மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்கள் மேற்கொண்டு ஒத்துழைக்குமாறும்” இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

Print Friendly, PDF & Email