SHARE
image_pdfPRINT

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சீர்திருத்த அரசு மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும், நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும், வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் என்று பலர் கருதிய போதிலும், அவர் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும், சமூகங்கள் மத்தியில் பிணைப்பை அதிகரிக்க சிறிலங்கா அதிபர் எதனையும் செய்யவில்லை”

இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் மனித உரிமைகள் கரிசனைகள்” என்ற தலைப்பில் நடந்த அமெரிக்க காங்கிரஸின் உப குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழுவின், ஆபிரிக்க, பூகோள சுகாதார, பூகோள மனித உரிமைகள், மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான உபகுழு, நேற்று “இலங்கையின் மனித உரிமைகள் கரிசனைகள்” என்ற தலைப்பில் அமர்வு ஒன்றை நடத்தியது.

இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கிய, உபகுழுவின் தலைவரான, கிறிஸ் ஸ்மித், தனது உரையில் தெரிவித்ததாவது:

“இலங்கையில் உள்நாட்டுப் போர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது, 25 ஆண்டு கால போரால், ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர்.

பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையிலான கொடூரமான இன மோதல்களாக இந்த உள்நாட்டுப் போர் இடம்பெற்றது.

போரில் ஈடுபட்ட இருதரப்புகளான இலங்கை அரசின் ஆயுதப் படைகளும், தமிழ்ப் புலிகளும் கற்பனை செய்து பார்க்க முடியாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி என்பது கண்ணிற்கு தென்படாத விடயமாகவே உள்ளது.

இரு சமூகங்கள் மத்தியிலான, அரசியல் துருவமயப்படுத்தல் அதிகரித்துள்ளது – என்றார்.