SHARE

-இலங்கை அரசுக்கு ஜஸ்மின் சூக்கா எச்சரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை இலங்கை அரசு, தொடர்ச்சியாக தட்டிக் கழிப்புகளை செய்து, பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால் அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (ITJP) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா எச்சரித்துள்ளார்.
இறுதி யுத்தம் நடைபெற்ற 2009 மே யின்  இறுதி நாட்களின் போதும் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த போதும் காணாமல்போனவர்களின் விபரங்களை பட்டியலிட்டும் இணையத்தளம் ஒன்றை உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (ITJP) நேற்று யாழில் அறிமுகம் செய்தது.
 
ITJP யின் இந்த இணையத்தளமானது இலங்கை இராணுவம் கொடுக்க மறுக்கிற சரணடைந்தவர்களின் பட்டியலலை மீண்டும் உருவாக்குகிறது. இதில் தற்போது 280 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
 
குறித்த இணையத்தளத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள் 
http://itjp.bong.international/
 
இதில் மேலதிக தகவல்களை/திருத்தங்களை itjpsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையிலேயே இந்த அறிமுக நிகழ்வில் தொலைத் திரை (Skype) மூலம் பேசிய ஜஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி ஒரே நாளில் இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் வேறு வழிகளிலும் காணாமல் போனவர்களில் 280 பேரின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் அவர்கள் தொடர்பான விவரங்களையும் (ITJP) என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொள்ளும் போது மேற்குறிப்பிட்டுள்ள 280 பேர் தொடர்பான தகவல்களில் இருந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விசாரணையின் முக்கியத்துவம் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு நாம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.

மேலும் மே 18 அன்று இராணுத்திடம் சரனடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இராணுவம் பதிலளிக்க வேண்டும். குறிப்பாக அக் காலப்பகுதியில் கட்டளையிடும் பிரிவில் இருந்த 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது விடயங்களையும் பதிவு செய்யவதற்கான பொது நிலையான தளம் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.
மேலும் காணாமற்போனார் தொடர்பான விடயத்தில் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்களே சாட்சியாக உள்ளனர் என தெரிவித்தார்.
Print Friendly, PDF & Email