SHARE
உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் வலைகளை எரித்து நாசம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்  விளக்கமறியலில் வைக்கப்பட்ட லண்டனில் வதிவிட உரிமைபெற்றவரை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அதேவேளை சந்தேகநபரின் கடவுச்சீட்டை முடக்கிவைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார்.
வெளிநாட்டவருடன் இந்தக் குற்றத்துக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களையும் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியிலுள்ள கடற்கரைக்கு லண்டனிலிருந்து வந்த நபரொருவரும் அவரது நண்பரும் முச்சக்கர வண்டியொன்றில் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு பனை மரம் ஒன்றின் கீழே இறால் பிடிக்கும் வலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தின் மத்தியில் நெருப்பு மூட்டி மீன்களை சுட ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தை அவதானித்த  வலை உரிமையாளர்கள் வலைகள் வைக்கப்பட்டிருந்தமையால் அந்த இடத்தில் நெருப்பு மூட்ட வேண்டாம் என கேட்டுள்ளனர் .
எனினும் அதனை வந்திருந்தவர்கள் ஏற்காததுடன் தொடர்ந்தும் அவ்விடத்தில் இருந்துள்ளனர்.
வலை உரிமையாளர்கள் அவ்விடத்திலிருந்து சென்று சிறிது நேரத்தின் பின்னர் வந்து பார்த்த போது, 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் தீயில் எரிந்து நாசமாகி கிடந்ததை கண்டுள்ளனர். இந்தச்  சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு
அறிவிக்கப்பட்டது.
பொலிஸாரின் விசாரணையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்  கைது செய்யப்பட்டார். அவர்  யாழ் நீதிவான் நீதிமன்றில் கடந்த 3ஆம் திகதி முற்படுத்தப்பட்டார்.
அவரை இன்று 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார். அத்துடன், அவரது குற்றத்துக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டிச் சாரதி உள்பட இருவர் கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபருக்கு பிணை கோரி அவரது சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை ஆராய்ந்த நீதிவான், “சந்தேகநபர்கள் மூவரும் பிணை முறியில்  கையொப்பமிட்டு செல்லலாம்.வெளிநாட்டவரின் கடவுச்சீட்டு நீதிமன்றால் முடக்கப்படுகிறது” என்று கட்டளையிட்டார்.
Print Friendly, PDF & Email