SHARE
“வாள்வெட்டுக் கும்பலில் தொடர்புபடாத 17 வயது இளைஞனை சந்தேகநபராகக் கைது செய்து பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் இளைய தலைமுறையினரின் வாழ்வைப் பாழாக்கும் வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் அமைகின்றன. பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளை நீதிமன்றம் தலையிட்டே -அதில் சிறப்புக் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்தவேண்டும்”
இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார் மூத்த சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம்.
“சட்டத்தரணிகளால் முன்வைக்கப்படும் சமர்ப்பணங்களை இந்த மன்று கவனத்தில் எடுத்து, பலரை விடுவித்தது. அதனால் எல்லோருமே அப்பாவிகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது.  நவீன தொழிநுட்ப யுகத்தில் சிசிரிவி கமரா பதிவுகள் மூலம் பலரின் குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்றன. சிசிரிவி காணொலிப் பதிவுகளைப் பார்க்கின்ற போது, பல இளைஞர் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது வெளிப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றின் மீது கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி பிற்பகல் அடாவடிக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது.
தாக்குதலையடுத்து 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனைய நான்கு பேரும் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் சந்தியில் நண்பனின் பிறந்த நாளைக் கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்திடனோம்  என சந்தேகநபர்கள் தெரிவித்தாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
சந்தேகநபர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.
2ஆவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
“எனது கட்சிக்காரர் 17 வயதுடைய இளைஞன். அவருக்கும் இந்த வன்முறைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. பொலிஸார் எனது கட்சிக்காரர் மீது பொலிஸார் வேண்டும் என்றே
குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
முதலாவது சந்தேகநபர் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியில் பயின்று சாதாரண தரத்தில் 8ஏபி பெறுபேற்றைப் பெற்றவர்.
யாழ்ப்பாணத்தில் இளைய தலைமுறையினரின் வாழ்வைப் பாழாக்கும் வகையில் பொலிஸார் செயற்படுகின்றனர். இவ்வாறான செயற்பாட்டை தடுக்க நீதிமன்றம் கவனம் செலுத்தவேண்டும்.
எனவே 2ஆவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்க மன்றைக் கோருகின்றேன்” என்று மூத்த சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
“வன்முறைகளில் சம்பந்தப்படாதவர்கள் சிலரை சந்தேகநபர்கள் என்றுகூறி பொலிஸார் கைது செய்கின்ற போது, நீதிமன்றம் அவ்வாறானவர்களை விடுவிக்கின்றது. ஆனால் அனைவரையும் தப்புச் செய்யாதவர்கள் – அப்பாவிகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது.
நவீன தொழிநுட்பங்கள் வந்த பின்னர், வன்முறைகளில் ஈடுபடுபவர்களை இலகுவாக இனங்காண முடிகின்றது. சிசிரிவி காணொலிப் பதிவுகளைப் பார்க்கின்ற போது, இளைஞர்கள் எவ்வாறு ஆக்கிரோசமாக செயற்படுகின்றனர் என்பது அறிய முடிகின்றது.
பொது இடத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடவேண்டும் இல்லை. எத்தனையோ மண்டபங்கள் உள்ளன – வீடுகள் உள்ளன. இவர்கள் வீதியில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்” என்று நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் சுட்டிக்காட்டினார்.
“அடுத்த தவணையின் போது சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பொலிஸார் தாக்கல் செய்யவேண்டும். சந்தேகநபர்கள் 4 பேரின் விளக்கமறியல் வரும் 15ஆம் திகதிவரை நீடிக்கப்படுகிறது” என்று மன்று கட்டளையிட்டது
Print Friendly, PDF & Email