SHARE

122981840133
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த லெப். கேணல் குமார ரத்நாயக்க, லெப்.கேணல் சிறிவர்த்தன, ஸ்ராவ் சார்ஜன்ட் ராஜபக்ச மற்றும் கோப்ரல் ஜெயலத் ஆகியோர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 2010ஆம் ஆண்டு பிரகீத் எக்னெலிகொட கடத்திக் கொண்டு செல்லப்பட்ட கிரிதல இராணுவ முகாமில் பணியாற்றியவர்களாவர்.

Mr. B M U D Basnayaka
Mr. B M U D Basnayaka

இவர்களை ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு தேர்தலுக்கு முன்னர் விடுத்த வேண்டுகோள்களை புறக்கணித்து வந்த சிறிலங்கா இராணுவத் தலைமை, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது.

நேற்றுக்காலை விசாரணைகளை ஆரம்பித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவர்கள் நால்வரையும் மாலையில் கைது செய்தனர்.

லெப்.கேணல் தர அதிகாரிகள் இருவரையும் கைது செய்ய எடுக்கப்பட்ட முடிவுக்கே சிறிலங்கா பாதுகாப்பு உயர் மட்டத்தில் உள்ள இரண்டு அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுமே, இவர்களைக் கைது செய்ய எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதற்காக இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் இவர்கள் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்றும், அவர்கள் வாதிட்டுள்ளனர்.

எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்ட இராணுவ அதிகாரிகளைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

source : puthinappalakai.net

Print Friendly, PDF & Email