SHARE
SRI-LANKA-ELECTION

”நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்காக ஆற்றிய விசேட  உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனநாயக ரீதியாக மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள். எமது நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்த எனது ஆட்சிக்காலத்தில் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நாம் மிகவும் சவாலானதொரு கட்டத்தில் தான் உள்ளோம். நான் மெஜிக் காரனோ மாயாஜால வித்தைக் காரனோ கிடையாது. நானும் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண பிரஜை.
எனக்கும் ஆற்றல்கள் இருக்கின்றன. ஆற்றாமைகளும் இருக்கின்றன. நாம் அறிந்த விடயங்களும் இருக்கின்றன. அறியாத விடயங்களும் இருக்கின்றன.

ஆனால் என்னுடைய முதன்மைப்பணி ஆற்றல்களை உறிஞ்சி எடுத்து அறிந்தவற்றை ஒன்று திரட்டி மிகச் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும்.
அதனால் அந்த கூட்டான இடையீட்டின் பங்காளியாவதே என்னுடைய பொறுப்பாகும்.
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.

இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன்.
எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும்.

உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.

அதைப்போலவே எமது நாட்டை கட்டியெழுப்புகையில் கைத்தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்களை பலம்பொருந்தியவர்களாக கட்டியெழுப்ப அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவார்களென நாங்கள் நம்புகிறோம்.

எமது நாட்டின் ஜனநாயகத்தினால் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன்.
அவ்வாறு தெரிவு செய்துகொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன. எனவே எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.

எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக்காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது. அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email