உத்தேச பயங்கரவாத எதிரப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று (செவ்வாய்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
07 தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த முழுமையான கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு, கிழக்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், மக்கள் வீதியில் இறங்கி போராடுவதும் அரசுக்கு எதிரான சதி முயற்சியாக கருதப்பட்டு கைது செய்யப்படலாமென குறித்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வடக்கு கிழக்கு மாகாணங்களின் 08 மாவட்டங்களிலும் இன்று முழுமையான கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதுடன், பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை, சந்தைகள் மூடப்பட்டுள்ளன.