இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு தற்போது நடைபெறுகின்றது.
அரச அமரர் ஊர்திக்கு மகாராணியின் பூதவுடலானது மாற்றப்பட்டு, விண்ட்சர் கோட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை நேரப்படி இன்று காலை 11 மணியுடன் ராணியின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கான நேரம் முடிவடைந்துள்ளது.
அரச மரியாதையுடன் நடைபெறும் மகாராணியின் இறுதிச் சடங்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ராணியின் உடல் தற்போது ஊர்வலமாக விண்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
விண்ட்சரிலுள்ள மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் ஞாபகார்த்த தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்ட்சர் கோட்டையானது 40 முடியரசர்கள் வாழ்ந்த இடமாகும். இதேவேளை, இரணடாம் உலக யுத்தத்தின் போது லண்டனுக்கு குண்டு வீசப்படும் அபாயம் காணப்பட்ட நேரத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணி குறித்த கோட்டையிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் கோவிட் காலத்திலும் இரண்டாம் எலிசபெத் மகாராணி குறித்த கோட்டையிலேயே வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விண்ட்சர் கோட்டையானது அவருக்கு மிகவும் விருப்பமுடைய இடமாக காணப்பட்டமையினால் பூதவுடல் கோட்டையை நோக்கி எடுத்துச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.