SHARE

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுவிழாவில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் இறந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் பணி செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானியாவிலுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்த விளையாட்டு விழா நேற்யை தினம் (4) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்றது.

இந்நிலையிலேயே, இலங்கை யுத்தத்தினால் இறந்தவர்களின் தரவுகளை பல தளங்களில் தொடர்ச்சியாக சேகரித்துவரும் செய்பாட்டாளர் குழுவினர் பெருந்திரளான பிரித்தானியாவாழ் புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்ட மேற்படி விளையாட்டுவிழாவிலும் தரவுகளை சேகரித்தனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ தரவுகளோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.

தமிழ் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலைக்கு இதுவரை நீதி வழக்கப்படாத நிலையிலும் யுத்தக்குற்றம் இழைத்த சிறிலங்கா அரசை குற்றவியல் நீதிமன்றில் இதுவரை நிறுத்தப்படாத நிலையிலும் இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பவற்றிற்கு மிகவும் அத்தியவசியமானதொன்றாக சேகரிக்கப்படும் இறந்தவர்கள் தொடர்பிலான தரவு அமையும் என மேற்படி பணியை முன்னெடுத்த செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பிரதான செயற்பாட்டாளர் சசிகரன் செல்வசுந்தரம் தலைமையில் நடைபெற்ற மேற்படி தரவு சேகரிப்பு பணியில் செயற்பாட்டாளர்களான மநுமயூரன் கிருபானந்த மநுநீதி, கபிலன் அன்புரெத்தினம், தங்கவேலாயுதம் வானுசன், தனபாலசிங்கம் பிரதீபா, விஜய் விவேகானந்தன், அஜிபன் ராஜ் ஜேயெந்திரன், நிதர்சன் தவராசா, பபிசன் போல்ராஜ், துவாரகன் குமரகுலசிங்கம், விதுரா விவேகானந்தன் ஆகியோர் தரவுகளை சேகரித்தனர்.

Print Friendly, PDF & Email