வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளில் இலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கைப்போரில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த நிலையிலும் இன்றுவரை யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ பட்டியலோ யாரிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (HRDAG) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன.
இந்நிலையிலேயே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச நாளை நினைவு கூரும் வகையிலும்இ இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வடக்குஇ கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும் பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இலண்டன் சதுக்கத்தில் (Trafalgar Square) நேற்றையதினம் நடத்திய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல்த்திட்டம் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
பிரதான செயற்பாட்டாளர் மநுமயூரன் கிருபானந்த மநுநீதி அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட மேற்படி கணக்கெடுக்கும் பணியில் செயற்பாட்டாளர்களான தங்கவேலாயுதம் வானுசன், தனபாலசிங்கம் பிரதீபா, சாருப்பிரியன் சிறீஸ்கரன், பிரசன்னா பாலசந்த்திரன், விஜய் விவேகானந்தன், சசிகரன் செல்வசுந்தரம் நிலக்ஐன் சிவலிங்கம், அஜிபன் ராஜ் ஜேயெந்திரன், நிதர்சன் தவராசா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரிடமிருந்து யுத்தத்தினால் இறந்த அவர்களின் உறவுகளின் பெயர் விபரங்களை சேகரித்தனர்.
இந்நிலையில் மேற்படி செயற்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த செயற்பாட்டாளர்கள் இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பவற்றிற்கு மிகவும் அத்தியவசியமாக இந்த பணி இருக்கின்றமையால் மிகுந்த ஆர்வத்துடன் இந்த பணியில் முன்வந்து ஈடுபடுவதுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குரலுக்கு நாமும் வலுச்சேர்க்கின்றோம் என தெரிவித்தனர்.
மேலதிக விபரங்களிற்கு இங்கே அழுத்தவும்