SHARE

பெற்றோல் நிலையங்களுக்கு அருகில் முறைகேடுகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடமையில் இருக்கும் குறிப்பிட்ட சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கடமையில் இல்லாத சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

சில பொலிஸ் அதிகாரிகள் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு எரிபொருளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எரிபொருளை சேகரித்து சிலர் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், அதனை விற்பனை செய்யும் குறிப்பிட்ட நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு உதவி செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் இருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு எளிதில் எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் தனது சுற்றறிக்கையில் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள சட்டத்தின்படி, அத்தகைய பொலிஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, ஊழல் மற்றும் பிற குற்றங்கள் போன்ற ஒழுங்குமுறை குற்றங்கள் குறித்து முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான அதிகாரிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கைகளை கோருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் உரிய சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்காத பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email