தமது உயிருக்கு பாதுகாப்பு கோரி பிரித்தானியாவிற்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு நாடுகடத்தும் பிரித்தானியாவின் மனிதநேயத்திற்கு புறம்பான நடவடிக்கையை கண்டிதுள்ள இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ICPPG) இணையவழி கையொப்ப மனு ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.
கடந்த இவ்வாண்டு (2022) ஜனவரி மாதம் 1 ஆம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவிற்குள் சட்டவரோதமாக வந்து அரசியல் தஞ்சம் கோரும் அகதிகளை ருவண்டா நாட்டிற்கு ஒரு வழிப்பயணச் சீட்டின் மூலம் வலுக்கட்டாயமாக அந்நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் அந்நாட்டுடன் ஒப்பந்தமிட்டுள்ளார். அதன்படி பிரித்தானியாவிலிருந்து அங்கு அனுப்பப்டுவோரின் அகதி அந்தஸ்து விண்ணப்பம் ருவண்டாவில் வைத்தே பரிசீலிக்கப்படவுள்ளதுடன் அவர்களின் அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்ட்டால் அவர்களுக்கு ருவண்டாவிலேயே 5 ஆண்டுகள் இருக்கும் அகதி உரிமை வழங்கப்படவுள்ளது.
இதனை வரவேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் சட்டவிரோதமாக வரும் அகதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இது ஒரு புதுமையான அணுகுமுறை என கூறியுள்ளதுடன் பிரித்தானியாவுக்குள் நுழையும் எண்ணம் கொண்ட அகதிகளுக்கு இந்த ஒப்பந்தம் பயத்தை ஏற்படுத்தும்இ அதனால் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையத் தயங்குவார்கள் என பிரித்தானிய அதிகாரிகள் சிலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்
இதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் இந்தத் திட்டம் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்று ஐக்கிய நாடுகளின் சபை குற்றம்சாட்டியுள்ளது. இத்தகைய திட்டங்கள் புலம்பெயர்ந்தோருக்கு மறுவாழ்வு அளிப்பதை விட பெரிய அளவிலான கொடுமைகளை மட்டுமே செய்கின்றன என்று பல மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளர்.
UNHCR இன் பாதுகாப்புக்கான உதவி உயர் ஆணையர் Gillian Triggs போர், மோதல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து தப்பியோடிய மக்கள் இரக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் தகுதியானவர்கள். அவர்களை பொருட்களைப் போல வர்த்தகம் செய்யக்கூடாது மற்றும் செயலாக்கத்திற்காக வெளிநாடுகளுக்கு மாற்றப்படக்கூடாது.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையிலேயே, அகதி தஞ்சக்கோரிக்கையாளர்கள் ருவண்டாவிற்கு அனுப்பப்படவதை தடுக்கக்கோரி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்துள்ள ICPPG மேலும் தெரிவிக்கையில்
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதற்கான அனைத்து உரிமைகளும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால் சட்டவிரோதமான செயல்களையும்இ மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்காத நாட்டில் அடைக்கலம் தேடி தங்கள் உயிரை பாதுகாக்க வரும் அகதிகளை அனுப்புவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். இது மனித நேயத்திற்கு புறம்பான செயலாகும். ருவாண்டா நாட்டின் மனித மீறல்களை குறித்து பிரித்தானிய அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் கண்டித்துள்ளது.
ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் எதுவிதமான விமர்சனைங்களையும் பொருட்படுத்தாமல் 158 மில்லியன் டாலரை முன்பணமாக ருவாண்டன் அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது. இந்த பணம் எதற்காக கொடுக்கப்பட்டது? பணம் கொடுக்கப்பட்ட காரணத்திற்கு பயன்படுமா? என்று பல கேள்விகள் பிரித்தானிய பொது மக்களால் தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ICPPG யினால் ஆரம்பிக்கப்ட்டுள்ள கையெழுத்து மனுபோராட்டத்தை கீழே உள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் பார்வையிடுவதுடன் உங்கள் கையொப்பத்தையுமிட்டு ஆதரவு வழங்க கோரியுள்ளனர்.
https://www.change.org/p/stop-forced-removal-of-asylum-seekers-to-rwanda-stop-treating-them-as-commodities-85cdf62a-1d96-4981-a04f-086472aed888