SHARE

மதிப்பிற்குரிய டோனியா அன்டோனியாஸி (Hon. Tonia Antoniazzi) அவர்களுடனான இராஜதந்திர சந்திப்பின் வெற்றி.

யுத்தகுற்றவாளியும் இனப்படுகொலையாளியும் இலங்கையின் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நோக்கில், பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் மற்றும் சித்திரவதையால் பாதிப்புற்றோர் இராஐதந்திர சந்திப்புக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த அடிப்படையில் இன்று வட அயர்லாந்தின் நிழல் அமைச்சரும் (Shadow Minister for Northern Ireland) தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமாகிய மதிப்பிற்குரிய டோனியா அன்டோனியாஸி (Hon. Tonia Antoniazzi) அவர்களுடனான முக்கிய சந்திப்பு திங்கள் (11/04/2022) காலை 11மணிக்கு இடம்பெற்றுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான திரு கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தொழில்கட்சிகான தமிழர்கள் அமைப்பின் (Tamils For Labour) தலைவர் சென் கந்தையா அவர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். அத்துடன் இலங்கையில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நிலக்ஜன் சிவலிங்கம் மற்றும் நிதர்சன் தேவராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தனது தலைமை உரையில் திரு கீத் குலசேகரம் அவர்கள் இறுதியுத்தத்தில் இடம்பெற்ற போர்குற்றங்கள், இனவழிப்பு மற்றும் தற்பொழுது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல், சித்திரவதைகள் என்வற்றுக்கு சவேந்திர சில்வாவும் அவர் தலைமையில் இயங்கும் இராணுவ படையும் பொறுப்பாக இருப்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்ற போதிலும், அவர்மீது யுத்த விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு பதிலாக, அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் கடந்த ஏப்பில் 2021 இல், ITJP என்ற அமைப்பு, இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் 1,40,000க்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய கோவையை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிடம் (FCDO) இடம் சமர்ப்பித்திருப்பதையும், அதுபோல மே 2021 இல், ICPPG என்ற அமைப்பு இலங்கையில் கடந்த இருவருடங்களுக்குள் சித்திரவதைக்குள்ளாகிய 200 பேரின் வாங்குமூலங்களின் அடிப்படையிலான அறிக்கையை சமர்ப்பித்திருப்பதையும் குறிப்பிட்டார்.

ஆயினும் பிரித்தானிய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதன் காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அழுத்தம் வழங்க கோரி வருவதையும் திரு கீத் குலசேகரம் எடுத்துரைத்தார். தமிழர் மீதான இனப்படுகொலைக்கு இந்த தடை முழுமையான தீர்வாக அமையாது என்ற போதிலும், நீதி நடவடிக்கைக்கு ஆரம்பகட்டமாக இருக்கும் என்றும், தொடரும் சித்திரதையை தடுக்க வழிவகுக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

தொழில்கட்சிக்கான தமிழர்களின் தலைவர் திரு சென் கந்தையா அவர்கள் தனது உரையின் போது, பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் தமிழர்களின் பங்களிப்பை எடுத்துக்கூறி, பிரித்தானிய அரசு பதிலுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். அத்துடன், உக்ரைனில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு பிரித்தானியா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாகவும், இறுதியுத்தத்தில் தமிழர்களிற்கு இடம்பெற்ற இனவழிப்பிற்கு எதிராக பிரித்தானியா அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், அது ரஸ்யாவுக்கும் பாடமாக அமைந்திருக்கும் எனவும் எடுத்துக்காட்டினார்.

தொடர்ந்து, மிக அண்மையில் இலங்கையில் இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாகி தப்பிவந்தவர்களாகிய நிலக்ஐன் சிவலிங்கம் மற்றும் நிதர்சன் தேவராஜா ஆகியோர் தங்கள் அனுபவங்களை நிழல் அமைச்சருக்கு எடுத்துக்கூறி, பிரித்தானியா நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் ஒவ்வொருநாளும் இப்படி சித்திரவதை தொடர்வதால், பிரித்தானியா உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினர்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நிழல் அமைச்சர், சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் கோரிக்கைக்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியதுடன், பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் உறுதியளித்தார். அத்துடன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இந்த கோரிக்கையை பாராளுமன்றில் விவாதிக்க ஏற்பாடு செய்வதுடன், வீடியோ மூலம் தனது ஆதரவை வெளிப்படுத்தவும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

Print Friendly, PDF & Email