SHARE

“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர அவதானத்தைச் செலுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று, முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவித்தல், குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஆரம்பித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைத்தல், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மக்களின் நோக்கங்களையும் நிறைவேற்றி, நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்த முடியும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது தமது எதிர்பார்ப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார். நாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை, கிழக்கு சுவிட்சர்லாந்தாக மாறுவதை காண விரும்புவதாக திரு.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.

நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் எதிர்கால நடவடிக்கைகள், நீண்டகாலமாக பயிர்ச் செய்யப்பட்ட காணிகளை விடுவித்தல், காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தல், புதிய அரசியலமைப்பு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதன் பின்னர் அதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுதல், வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், சமல் ராஜபக்ஷ, அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் ஸ்ரீதரன், சாணக்கியன் ராஜபுத்திரன், தவராஜா கலையரசன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். நோஹர்தலிங்கம், கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email