SHARE

கூட்டமைப்புடன் எதற்கு பேச்சு நடத்த வேண்டும்?

தமிழினத்திற்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது, அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்.

இதற்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் அவரே அதனை இரத்து செய்து வேறு திகதியை வழங்குவதாக உறுதியளித்த போதும் எந்த அழைப்பும் ஜனாதிபதி அலுவலகத்தினால் விடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வு தமிழர்களுக்கு தேவையில்லை, பொருளாதாரம் சார்ந்த தீர்வுதான் தேவையென்று ஜனாதிபதி கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் அரசியல் தீர்வு தொடர்பாக கூட்டமைப்புடன் அவர் பேசவேண்டிய தேவையில்லை என கூறினார்.

இதேவேளை காணி அபகரிப்பு தொடர்பாக பேசவேண்டுமாகயிருந்தால் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாத்திரமல்லாமல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசவேண்டும் என்றும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் கைதி விடுதலை, காணாமல் ஆக்கபட்டோர் விவகாரம் என 15 பிரச்சினைகளை முதலில் நிவர்த்தி செய்தபின்னர் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது நியாயம் என அவர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email