SHARE

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஞாபகார்த்தமாக புலமைப்பரிசில் வழங்கும் திட்ட அங்குரார்பண நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று (22) நடைபெற்றது.

ஊடகக்கற்கை நெறியைத் தொடரும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் ஆலோசனையில், அமரர் அஸ்வினின் சகோதரரான ஊடகவியலாளர் சுகிர்தனால் மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இத்திட்டத்தின் முதற்கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை தொடரும் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவரின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்;கும் வகையில் ஒரு வருடத்திற்கான செலவாக ஒரு இலட்சம் பெறுமதியில் புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக கலைபீட மாணவ ஒன்றியத்தலைவர் பி.உயாந்தனின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியர் அருட்பணி எஸ்.ஏ.றொஷான் அடிகளாரும் புனித பத்திரிசியார் கல்லூரியின் பகுதித்தலைவர் அன்ரன் துஷியந்தன் அடிகளாரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் லூ.அனுஜன் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் ஊடகத்துறை சார்ந்தவர்கள் மற்றும் பல்கலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் அமரர் அஸ்வினின் திருவுருவப்படத்துக்கு சிறப்புவிருந்தினர் அருட்திரு றொசான் அடிகளார் தீபம் ஏற்றிவைக்க, அஸ்வினின் பெற்றோர்கள் மலர் மாலை அணிவித்தனர்.

அதனை தொடர்ந்து விருந்தினர்களின் உரை இடம்பெற்றதுடன் தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கான புலமைப்பரிசிலை அமரர் அஸ்வினின் பெற்றோர் வழங்கி வைத்தனர்.

இந்நிலையில் இதில் சிறப்புரையாற்றிய பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியர் றொசான் அடிகளார், அஸ்வினின் கேலிச்சித்திர ஓவியங்கள் இன்றும் தீர்கதரிசனம் பேசுவதாக இன்றைய காலத்திற்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன என கூறினார். ‘கோடுகளால் பேசியவன்‘ எனும் தலைப்பில் வெளிவந்த அவரது கார்ட்டூன் தொகுப்பு நூலினை கையில் வைத்தபடி அதிலுள்ள தீர்க்கதரிசன ஓவியங்கள் பற்றிய தனது வியப்பை வெளிப்படுத்திய அடிகளார் இன்றும் அவரது கார்ட்டூன்கள் காலத்துக்கு ஏற்றவகையில் பொருந்துவனவாக அமைந்துள்ளன என சில பக்கங்களை புரட்டி அடையாளம் காட்டினார்.

அஸ்வின் மறைந்தாலும் அவர் தனது கோடுகளின் மூலம் இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார் என்றார்.

மேலும், குறித்த புலமைப்பரிசில் திட்டத்தின் பயனாளர்கள் அதனை பயன்படுத்தும் விதம் கொடையாளர்களை மேலும் மேலும் வழங்கும் மனநிலையை ஏற்படுத்தும் வகையில் அமையப்பெறவேண்டும். இதேபோல் எதிர்காலத்தில் இன்னமொரு மாணவனின் கல்விசெயற்பாட்டிற்கு பயனாளர் கைகொடுக்கும் அளவிற்கு சிறப்புற கல்வியை கற்றவேண்டும் அதனை பயனுள்ளதாக்கிக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதேவளை, அஸ்வினிடம் கல்விகற்றும் வாய்பினை தான் பெற்றமை பாக்கியமாக கருதுவதாக பத்திரிசியார் கல்லூரியின் பகுதித்தலைவர் அன்ரன் துஷியந்தன் அடிகளார் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு ஆனந்தபுர பாடசாலையில் அவர் சித்தரப்பாட ஆசிரியராக கடமையாற்றிய போது அவரிடம் தான் கல்வி கற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அடிகளார் அவரது இழப்பு ஊடகத்துறையில் ஈடுசெய்யமுடியாததொரு இழப்பு என தெரிவித்தார்.

அதேவேளை பல்கலைக்கழகத்தில் ஊடககற்கை நெறிக்கான மாணவர்களின் விகிதாசாரம் குறைவாகவே உள்ளதாக வருத்தம் தெரிவித்த அவர் எதிர்வரும் காலத்தில் அவற்றினை நிவர்த்திசெய்யும் வகையில் கற்றல் செயற்பாடுகள் அமையவேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அஸ்வின் வலம்புரி, சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் தனக்கான முத்திரைகளை பதித்துள்ளார். அதேவேளை வீரகேசரியின் யாழ்.ஓசை பதிப்பின் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.

இதில் இவர் எழுதிய கேட்டியளே சங்கதி என்ற பத்தி எழுத்து பல இடங்களிலும் எதிரொலித்தது. அந்த எழுத்துகள் ஓர் மௌனப் புரட்சியையும் செய்தது. இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் சிறந்த ஊடகவியலாளர் விருதை கேட்டியளோ சங்கதி பத்திக்காக வழங்கிக் கௌரவித்தது.

இறுதியாக தினக்குரல் பத்திரிகையில் இவர் வரைந்த கருத்தாழமிக்க கார்ட்டூன்கள் வாசகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் பேசவைத்தது. அவரது காட்டூன்கள் பல இன்றை காலத்திற்கும் பொருத்தமான தீர்க்கதரிசன ஓவியங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email