மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊடககற்கை நெறியைத்தொடரும் மாணவர்களில் கற்றல் செயற்பாட்டுக்கான உதவிக்கரம் அவசியப்படும் மாணவர்களிற்கு வருடாந்தம் கரம் கொடுக்கும் நோக்கில், அவரது சகோதரன் உடகவியலாளர் சுகிர்தனால் மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முதற்கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை தொடரும் மாணவர் (மாணவி) ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவரின் கல்விச் செயற்பாட்டை தொடர்வதற்கு ஏற்றவகையில் ஒருவருடத்திற்கு ஒரு இலட்சம் பெறுமதியில் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் மேற்படி புலமைப்பரிசில் திட்டத்தின் முதல் நிகழ்வு அஸ்வினின் நினைவு நாளாகிய நாளை செவ்வாய்கிழமை (22.09.2020) யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியர் அருட்பணி எஸ்.ஏ.றொஷான் அடிகளாரும் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியர் அருட்பணி அன்ரன் துஸியந்தனும் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஊடகத்துறை சாந்த பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அஸ்வின் வலம்புரி, சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் தனக்கான முத்திரிகைகளை பதித்துள்ளார். அதேவேளை வீரகேசரியின் யாழ்.ஓசை பதிப்பின் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
இதில் இவர் எழுதிய கேட்டியளே சங்கதி என்ற பத்தி எழுத்து பல இடங்களிலும் எதிரொலித்தது. அந்த எழுத்துகள் ஓர் மௌனப் புரட்சியையும் செய்தது. இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் சிறந்த ஊடகவியலாளர் விருதை கேட்டியளோ சங்கதி பத்திக்காக வழங்கிக் கௌரவித்தது.
இறுதியாக தினக்குரல் பத்திரிகையில் இவர் வரைந்த கருத்தாழமிக்க கார்ட்டூன்கள் வாசகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் பேசவைத்தது. அவரது காட்டூன்கள் பல இன்றை காலத்திற்கும் பொருத்தமான தீர்க்கதரிசன ஓவியங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.