SHARE

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர்.

அரசாங்கத்தினால் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 450க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடியதோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் நிராகரிக்கப்பட்ட காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ள EPF, ETF  பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கான பிரச்சினை மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை போன்ற மூன்று விடயங்களை உள்ளடக்கி வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

குறித்த விடயங்கள் தொடர்பாக உரிய தரப்பினருக்கு அதனை தெளிவுபடுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க ஆவண செய்யுமாறு கோரி மகஜர் கையளித்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே அரசாங்கத்தினால் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி தமது கடமைகளை ஆரம்பிக்கின்ற நிலையில், நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 2ஆம் திகதிக்குள் உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பட்டதாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email