SHARE

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமஷ்டி, அரசியல் கைதிகள் விவகாரம், வடக்கு, கிழக்குக்கான மக்கள் வாக்கெடுப்பு மற்றும் இராணுவத்தை அகற்றுதல் என எந்தவொரு விடயம் தொடர்பிலும் அவர்களுடன் பேசுவதற்கான தேவை கிடையாது. அவர்கள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர்” என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான தொடர்புகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினரே 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் கூறும் எந்தவொரு விடயமும் அதில் உள்ளடக்கப்படவில்லை.

அவர்களுக்குத் தேவையானதைச் சேர்த்திருந்தால் அதை அப்போதே பெற்றிருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் எமது கூட்டணியில் அங்கம் வகிக்கும், டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

வன்னியிலும், மொட்டில் ஒருவரும் ஈ.பி.டி.பியில் ஒருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

அதேபோல, மட்டக்களப்பில் மொட்டில் ஒருவரும், சிறையில் இருந்து கொண்டு பிள்ளையானும் எமக்குக் கிடைத்துள்ளனர். அம்பாறையில் 4 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

இவற்றின்படி எமக்கு, வடக்கு, கிழக்கில் 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் ராஜபக்சக்களுடன் இருக்கும் விரோதம் காரணமாக மொட்டை ஏற்க மறுத்தனர். அதேபோல கூட்டமைப்பையும் ஏற்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியல்ல. ஆகவே, எதிர்காலத்தில் ஒரு தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக அல்லாது தேசிய கட்சியாகச் செயற்பட முன்வரவேண்டும்.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவது குறித்து தற்போதைய அரசாங்கம் பேச்சு நடத்துமாயின், தாங்கள் அதற்குப் பூரண ஆதரவைத் தரத் தயார் என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அத்தகைய பேச்சுகளின்போது நிபந்தனைகளுடன் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய முயன்றால் அதற்கு அரசில் இடம் கிடையாது. “என்றார்.

Print Friendly, PDF & Email