SHARE

கறுப்பினத்தவர்கள் மீதான வன்முறைக்கு எதிராக கொழும்பில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டம் நடத்தியதற்காக முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த முன்னிலை சோசலிச கட்சியினரால் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த போராட்டத்தினை நடத்துவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவை நேற்று பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தை நடத்த சுமார் 100 பேர் கூடியபோதும் அவர்களை பொலிஸார் தடுத்தனர்.

அத்தோடு நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதற்காக துமிந்த நாகமுவ உட்பட 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email