SHARE

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவனே இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

வவுனியாவில் உள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணராமய விகாரையில் வரும் அடுத்த மாதம் 22ஆம் நாள் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின், முக்கிய நோக்கம் என்று வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
வடக்கில், இதுவரை பௌத்த மாநாடு எதுவும் நடத்தப்படாத நிலையில், பௌத்த மதம் பற்றிய ஆய்வுகள் பலவற்றை முன்னெடுத்து வந்த சுரேன் ராகவன், வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த ஆளுநர்கள் பதவியில் இருந்த போதே, இத்தகைய மாநாடு நடத்தப்படாத நிலையில், தமிழரான ஆளுநரின் தலைமையில், பௌத்த மயமாக்கல் குறித்து குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில் இத்தகைய மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பின்னர், அரச செயலகங்களில் மும்மொழிப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், சுரேன் ராகவன், பௌத்த மாநாடு குறித்த அறிவிப்பை சிங்கள மொழி மூலமான அறிக்கையில் மாத்திரம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email