SHARE

பிரித்தானிய நீதிமன்றில் விசாரணை

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி  பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ICPPG அமைப்பு குற்றவியல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இது தொடர்பாக இறுதிகட்ட விசாரணைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி லண்டனில் நடைபெற உள்ளன. 

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் அவர்களால் வழிநடத்தப்பட்டுவரும் இந்த வழக்கின் இரண்டாம் அமர்வின்போது வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்று (westminster magistrates court)  மூலமாக கடந்த  நவம்பர் 9 ஆம் திகதி குறித்த இராணுவ அதிகாரிக்கு  எதிரான அழைப்பாணை பெறப்பட்டு இருந்தது.

அதன்படி  ஜனவரி  21 ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆயராக வேண்டுமென நீதிமன்றால் உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இதன் இறுதி கட்ட வழக்கு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. 

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின் போது (2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி) லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் பிரித்தானியா வாழ் தமிழர்களால் பாரிய எதிர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

இதன் போது தூதரகத்தின் அப்போதைய  பாதுகாப்பு அதிகாரியான பிரியங்கா பெர்ணான்டோ தூரகத்திற்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை  தனது தொலைபேசியில் படம் பிடித்ததுடன் அவர்களைப்பார்த்து கழுத்ததை வெட்டுவேன் என்ற சமிக்ஞையுடனான கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார். 

குறித்த காணொளி ஊடகங்கள் மற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதினையடுத்து உலகத்தமிழரிடையேயும் சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த அதிகாரியை பணிநிறுத்தம் செய்தது. எனினும் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அவரது பணிநீக்கம் இரத்து செய்யப்பட்டு தொடர்ந்தும் பணியில் அமர்த்தப்பட்டார்.

இதனையடுத்து கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரியை பிரித்தானிய பொலிஸார் கைது செய்ய வேண்டுமெனகோரி லண்டனில் உள்ள பொதுநலவாய அலுவலகத்திற்குமுன்னாள் ஒட்டுமொத்த லண்டன் வாழ் தமிழர்களும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். 

அதேவேளை, குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து பிரியங்கா பெர்ணான்டோ  இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டார்.

எனினும் கொலைமிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி லண்டனுக்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்படவேண்டுமென பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்று நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்டவர்களான மயூரன் சதானந்தன் தலைமையில் கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி, வினோத் பிரியந்த ஆகியோர் சார்பில் ICPPG அமைப்பு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது. நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி அமைச்சரான சொக்கலிங்கம் யோகலிங்கம், மற்றும் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த சபேஸ்ராஜ் ஆகியோர் முக்கிய சாட்சிகளாவார். அவர்கள் சார்பில் Public Interest Law Centre என்ற சட்ட நிறுவனத்தை சேர்ந்த Paul Heron மற்றும் Helen Mowat ஆஜராக உள்ளார். 

இந்த வழக்கை வழிநடத்தி வரும் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் அவர்களுக்கு ICPPG அமைப்பு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு Public Interest Law Centre மற்றும் ICPPG ஆகியவற்றால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ள.

Print Friendly, PDF & Email