SHARE

-யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஏ. தேவநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் அண்மைக்காலமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து உள்ளது, எனவே நோய் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு டெங்கு நுளம்பு பரவ கூடிய இடங்களை அழித்து தமது சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கோரியுள்ளார்.

அதேவேளை இந்த ஆண்டு ஆயிரத்து 448 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உட்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று உள்ளனர் என யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக காய்ச்சல் காரணமாக அதிகளவானோர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒரு நோயாளர் விடுதியில் 40 படுக்கை வசதிகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஆனால் தற்போது 50 தொடக்கம் 60 நோயாளிகள் ஒரு விடுதியில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நோயாளர்களுக்கு கட்டில் வசதிகள் வழங்கப்பட்டு ,  ஏனையவர்களை தரையில் அமர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மழை தொடருமானால் நிலைமை மேலும் மோசமடைய கூடிய நிலை ஏற்படும் என்பதனை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து உள்ளோம்.  ஆனாலும் நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் .

Print Friendly, PDF & Email