SHARE

பிரித்தானிய பொலிஸாரால் அடாத்தாக கைது செய்யப்பட்டு தடுத்து வகைக்கப்பட்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட செயற்பாட்டாளர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் வேண்டுமென்றே வழங்கிய பிழையான தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் தமிழீழ தேசிய கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை என்பதனை உலகிற்கு எடுத்து காட்டியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்த எண்மரில் நால்வர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையிலேயே சற்று முன்னர் மீதி நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேம்ஸ்வரி ஒக்ஸ்போட் காவல் நிலையத்திலிருந்து வெளியேறியதும்  பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம், அவர்களை சற்று முன்னர்  எமது  ‘நமது ஈழ நாடு‘ இணையம் தொடர்பு கொண்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அவர், தமிழர்கள் மீதான சர்வதேசத்தின் அடக்குமுறையாகவே இதனை பார்பதாக கூறினார். தவிர, சிங்கள உயர்ஸ்தானியின் கருத்தை கேட்டு செயல்பட்ட பிரித்தானிய பொலிசாரின் அடாத்தான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடிக்கு தடையா? இல்லையா என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறும் விடயமாகவும்  இது அமைந்துள்ளது. தமிழரின் தேசிய கொடி பற்றியும் அதன் நீண்ட வரலாறு பற்றியும் நான் அவர்களுக்கு எடுத்து கூறினேன். அப்போது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். எனினும் தமது விசாணைகளின் முடிவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக கூறினர் என அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய வருகை தந்திருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்றய தினம் ஒக்ஸ்போர்ட் யூனியனில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியல் தொடர்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அதேநேரம் இனப்படுகொலை அரசின் பிரதமர் ரணிலுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பிரித்தானிய தமிழர் ஒன்று திரண்டு ஒக்போர்ட் யூனியனின் முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு வந்திருந்த இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் திட்டமிட்டு வெண்டுமென்றே அவர்கள் பயங்கரவாதிகளின் கொடிகளை வைத்திருக்கிறார்கள் என காவலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கினார். இதனையடுத்து அடாத்தாக செயல்பட்ட பொலிஸார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு சமூகநல பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட தமிழீழ தேசிய கொடிகளை வைத்திருந்தவர்கள் என 8 பேரை கைது செய்தனர்.

இந்நிலையிலேயே தீவிர விசாரணைகளின் பின்னர் மறு நாளான இன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைதானவர்களின் விடுதலைக்காக விரைந்து நகர்வுகளை மேற்கொண்டிருந்த சட்ட வல்லுனர் கீத் குலசேகரம், சமவேளையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அழுத்தம் கொடுக்குமாறும் கோரியிருந்தார்.

அதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட தமிழ் இளையோரால் பிரித்தானியாவின் அனைத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக கைதானவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைககள் குவிந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email