SHARE
-இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த கோரிக்கை

பிரித்தானியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுத்தும் அடக்குமுறைகள் குறித்து அதிர்ப்தி வெளியிட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Janet Daby, ஆயுத விற்பனைக்கு எதிரான முன்பிரேரணை மனுவில் கையொப்பமிடுவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரிவரும் விசேட குழுவினருக்கும் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினருக்குமிடையில் பிரித்தானிய பாராளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து நல்லாட்சி நிலவுவதாக தெரிவித்து வரும் இலங்கை அரசு இன்று வரையிலும் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துவருகின்றது. இதனால் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்களப்பேரினவாதத்தின் அடக்குமுறையே அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துவரும் பிரித்தானிய அதனை நிறுத்தவேண்டுமென்று கோரி பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர், பிரித்தானியாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

அதன் பயனாக தற்போது இந்த விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவரும் முன்பிரேரணை நிலையை அடைந்துள்ளது. அந்தவகையில், இந்த முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு இளையோர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இளையோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே செயற்பாட்டாளர் சுரேஷ் சுப்பிரமணியத்தின் ஒருங்கிணைப்பில் செயற்பாட்டாளர்களான ராகவன் ராசலிங்கம், பொன்ராஜா கிறிஸ்ரிராஜ், நவரட்ணம் விஜயதீபன், மில்ட்டன் அலோசியஸ் துஷாந்தன், யோகராயா இக்னேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உமாராஜ் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் அஷாந்தன் தியாகராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் Janet Daby யை இன்று சந்தித்திருந்தனர்.

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடதொகுதிக்குட்பட்ட portcullis house 1 parliament street சந்திப்பு கூடத்தில் நடைபெற்ற இவ் விசேட சந்திப்பில் தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்பு பற்றியும் தமிழர் தாயக பிரதேசங்களில் தற்போதும் தொடரப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் குறித்தும் மேற்படி குழுவினரால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விபரிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் மக்கள் குறித்த தனது கவலையையும் அவர்களுக்கு எதிரான அடக்கு முறை குறித்த அதிர்ப்தியையும் வெளிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் Janet Daby,   ஆயுத தடைகோரிய விடயம் தொடர்பிலான முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாகவும் அதற்கான மனுவில் கையொப்பமிடுவதாகவும் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email