SHARE
கொடிகாமம் பாலாவியில் சம்பவம்

கொடிகாமம் பொலிசாரின் வாகனத்தை,  ஆயுதங்கள் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தருடன் தனி நபர் ஒருவர் கடத்தி சென்றமை தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கொடிகாம பொலிசார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருமண விருந்து உபசார நிகழ்வில் மோதல் சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது தொடர்பில் அங்கிருத்தவர்களால் பொலிஸ் அவசர சேவை பிரிவான 119 தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கபப்ட்டது.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வாகனத்தை வீதியோரம் நிறுத்தி விட்டு ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரை வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்க கூறிவிட்டு ஏனையவர்கள் மோதல்களை தடுக்க சென்று இருந்தனர்.

மோதலை தடுக்க சென்ற பொலிசார் , மோதலை தடுத்து , மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்டனர். அதன் போது அங்கிருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அந்நிலையில் அப்பகுதியில் நின்ற ஒருவர் பொலிஸாரின் ” கப் ” ரக வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளார். அதன் போது வாகனத்தின் பின்னால் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வாகனம் சுமார் 300 மீற்றர் தூரம் சென்றதும் சுதாகரித்து வாகனத்தில் இருந்து குதித்து வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி பிரயோகம் செய்தார். இருந்த போதும்  வாகனத்தை எடுத்து சென்றவர் அதனை மிக வேகமாக செலுத்தி சென்றார்.

அதனை அடுத்து அங்கிருந்த பொலிசார் அங்கிருதவர்களின் மோட்டார் சைக்கிள்களை வாங்கி , தமது வாகனத்தை துரத்தி சென்றனர்.

வாகனம் எடுத்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள பகுதியில் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில் பொலிஸ் வாகனம் மீட்கப்பட்டது.

அதேவேளை வாகனத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் துப்பாக்கி இருந்ததாகவும் , அதனை பொலிசார் மீட்க வில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் பொலிசார் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

குறித்த சம்பவத்தினை அடுத்து கொடிகாம பொலிஸ் நிலையத்தில் இருந்து மேலதிக பொலிசார் வரவழைக்கப்படும் , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்தும் பொலிசார் வரவழைக்கப்பட்டு துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பகுதியில் நேற்றைய தினம் இரவும் முழுவதும் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. இருந்த போதிலும் வாகனத்தை கடத்தி சென்ற நபரை பொலிசார் இன்று புதன்கிழமை காலை வரையில் கைது செய்யவில்லை.

Print Friendly, PDF & Email