SHARE

பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நட்டுவைப்பார் என பிரதமரின் அலுவலகம் நேற்றிரவு தெரிவித்தது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங்கும்
பங்கேற்பார் என பிரதமர் அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டது.

“பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி, நேரில் வந்து ஆராய்வதாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்” என பிரதமர் அலுவலகத்திடம் முதல்வன் கேள்வி எழுப்பியது.

“இல்லை இல்லை. அவர் அன்றையதினம் அடிக்கல் நடுவார். இந்த விடயம் யாழ்ப்பாண படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, இந்தியத் தூதுவர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது” என்று பெயரை வெளியிட விரும்பாத பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் முதல்வனுக்கு பதிலளித்தார்.

அலரி மாளிகையில் கடந்த 27ஆம் திகதி நடந்த வடக்கு அபிவிருத்தி தொடர்பான சிறப்புக் கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது, அதற்குத் தேவையான காணிகள் தவிர்ந்த, அதனை அண்டிய ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக பிரதமரால், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளிக்கப்பட்டது.

மேலும் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி தாம் யாழ்ப்பாணம் வரும் போது, இந்தியத் தூதுவர் , அங்கு வருவார் என்றும், இருவரும் இணைந்து, பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அதனை அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை இறுதி செய்வதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி இந்த தகவலைத் தெரிவித்தார்.

எனினும் பலாலி விமான நிலையத்துக்கு தேவையான காணியை எடுத்து மேலதிக காணிகள் விடுவிக்கப்படுமா? என முதல்வன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் அலுவலக அதிகாரி,

“பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்து சிவில் விமான போக்குவரத்து பிரிவிடம் கையளிப்பதே பிரதமரின் நோக்கம். மேலதிக காணிகளை விடுவிப்பது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு படையினரின் தீர்மானம்.

அது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்பு சபையே முடிவை எடுக்கும்” என்றார்.

Print Friendly, PDF & Email