SHARE

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டது போல வடக்கு கிழக்கில் தமிழினம் அழிக்கப்படுவதற்கான முன்னேற்பாடே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் என வடமாகாண கல்வி அமைச்சர் க .சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.

அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

தெற்கிலே தமிழர்கள் வாழவில்லையா ? ஏன் வடக்கில் சிங்களவர்கள் வாழ கூடாது என சிங்கள தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

அவர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தெற்கிலே தமிழர்களை அரசாங்கம் அழைத்து சென்று குடியேற்றவில்லை. அங்குள்ள மக்கள் தமது உழைப்பில் காணிகளை சொந்தமாக வாங்கி குடியேறியவர்கள்.

ஆனால் வடக்கு கிழக்கில் அவ்வாறு இல்லை. தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை திட்டமிட்டு அபகரித்து அந்த காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றுகின்றார்கள்.

வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்பு என தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்கின்ரர்கள். இலங்கைக்கு அயல் நாடுகளால் எந்த ஆபத்தும் இல்லை அவ்வாறு இருக்கையில் எதற்காக தேசிய பாதுகாப்பு என காணிகளை தொடர்ந்து அபகரித்து வருகின்றார்கள்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் , தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு மூலகாரணமாக விளங்குபவர்கள் முப்படைகளும் , சில பௌத்த தேரர்களுமே.

நாங்கள் வடக்கு கிழக்கில் தொழில் நிமித்தம் அல்லது வேறு காரணங்களுக்காக வாழ வரும் சிங்கள மக்களை எதிர்க்கவில்லை. அரசாங்கத்தினால் திட்டமிட்டு குடியேற்றப்படும் சிங்கள குடியேற்றங்களை தான் எதிர்க்கின்றோம் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email