SHARE

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானிய மிதவாதக்கட்சியின் (Liberal Democrats) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சேர் எட் டேவி (Sir Ed Davey) காணொளியொன்றினை வெளியிட்டு தமிழ் இளையோரின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்துள்ளார்.

அதில் அவர் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 70000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றதுடன் பலர் இடம்பெயர்ந்த போது 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை தடை செய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கடந்த வருடம் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினரை அமெரிக்கா தடை செய்தது போல் பிரித்தானியாவும் தங்கள் மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் தடை செய்ய வேண்டுமெனவும் இதற்கு அனைத்து பிரித்தானிய அமைச்சர்களும் ஆதரவாக குரல் கொடுக்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், பிரித்தானியா யுத்தத்தினால் தமிழ் மக்களிற்கு பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதாக வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்த வேண்டிய தருணமிதுவாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர் சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததுடன் அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டு 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் அவர்களால் முன்மொழியப்பட்டு கொண்டுவரப்பட்ட முன்பிரேரணைக்கு (EDM 64) ஆதரவு கோரி இதுவரை இப்பிரேரணைக்கு 29 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டுள்ளதுடன் கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு யூலை 23 ஆம் திகதி பிரித்தானிய பிரதமருக்கு ICPPG இன் ஆதரவுடன் மனுவொன்றினையும் சமர்ப்பித்திருந்தார்கள்.

அத்துடன் அண்மையில் இளையோர் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய அனைவரின் ஆதரவினையும் கோரி காணொளி ஒன்றினையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email