யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆனல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அத்துடன் நல்லூர் பிரதேசசபைக்கும் புதிய ஒரு வேட்பாளரை நியமித்தால் அவரையும் ஆதரிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
” யாழ் மாநகர சபை முதல்வருக்கு இ.ஆனல்ட்டை தவிர்ந்த இன்னொருவரையும், நல்லூர் பிரதேசசபையின் தவிசாளருக்கு தியாகமூர்த்தி தவிர்ந்த இன்னொருவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக அறிவித்தால் அவர்களை ஆதரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராக இருக்கிறது.
அதேநேரம் இரண்டு சபைகளிலும் பழைய- பதவி விலகிய ஆனல்ட், தியாகமூர்த்தி இருவரையுமே வேட்பாளர்களாக நிறுத்தினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவர்களை எதிர்க்கும். அதேநேரம் எமது எதிர்ப்பையும் மீறி அவர்கள் வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும், அவர்கள் சமர்ப்பிக்கும் வரவு செலவு திட்டத்தையும் எதிர்ப்போம்.
இதன் மூலம் இரண்டு சபைகளும் கலையும் நிலைமை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.” – எனவும் கூறினார்.