SHARE

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரடிப்படையினருக்கு (STF) எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் தினமான கடந்த 6 ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் சுமந்திரனின் பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியமைக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் முன்னாள் போராளி தனுபன் ஆகியோரா மேற்படி முறைபாட்டினை பதிவு செய்துள்ளனர்.

மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தேர்தல் வாக்கெண்ணும் தினத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்ப்பில் அதன் முகவர்களாக யாழ். மத்தியகல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தோம்.

இதன்போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் மிகவும் குறைந்தளவிலான வாக்குகளை பெற்றுக்கொண்டவர்களின் விபரங்களை அறிவிக்காமல் வேண்டுமென்றே நீண்ட நேரத்திற்கு இழுத்தடிப்பு செய்யப்பட்டது. இதனால் குறித்த தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் அங்கு ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம்.

இந்நிலையில் அங்கு திடீரென சுமந்திரன் தனது பாதுகாப்பு படைகளுடன் வந்தார். இதன்போது அவரது பாதுகாப்பு படையினர் எங்களையும் கட்சித்தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனையும் இன்னும் பலரையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

அப்பகுதி யாழ் மாவட்ட செயலரின் கட்டுப்பாட்டில் காணப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவரது முடிவினை பெற்றுக்கொள்ளாது சுமந்திரனின் பாதுகாவலர்கள் இந்த ஜனநாகவிரோத செயலினை தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளதாகவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email